மதயானை கூட்டம் திரைப்படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாரன் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் தமிழ் திரை உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் விக்ரம் சுகுமாரன். திரைத் துறையின் மீது கொண்ட தீராத காதலால், சென்னை வந்த அவர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.
1999 – 2000ஆம் ஆண்டுகளில் அவர் பாலு மகேந்திராவிடம் பணிபுரிய, பிறகு வெற்றி மாறனிடமும் நெருக்கமானவராக இருந்தார். 2007 ஆம் ஆண்டு வெளியான வெற்றிமாறனின் முதல் திரைப்படமான பொல்லாதவனிலும் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இதில் வெற்றிமாறனின் அடுத்த திரைப்படமாக ஆடுகளம் உருவானது.
மதுரையை சுற்றியுள்ள கதைக்களம் மற்றும் சேவல் சண்டைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படம் என்பதால், அந்த மண்ணிற்கே உண்டான குணாதிசயங்கள் உடைய கதாபாத்திரங்களும் வசனமும் வெற்றிமாறனுக்கு தேவைப்பட்டது. அதற்காகவே வசனகர்த்தாவாக பணிபுரிந்தார் விக்ரம் சுகுமாரன். அந்தத் திரைப்படத்தின் இயல்பு மாறாமல் இருந்ததற்கு விக்ரம் சுகுமாரனின் உழைப்பு முக்கிய காரணம் என்று கூறலாம்.
இப்படியான சூழலில் அவர் மதயானை கூட்டம் திரைப்படத்தின் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்தான் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். தேனி மாவட்டத்தை மையமாக வைத்து இந்த திரைப்படத்தின் கதை எழுதப்பட்டிருந்தது. முதல்முறையாக எழுத்தாளர் வேலராம மூர்த்தியை நடிகராக மாற்றி இருந்தார் விக்ரம் சுகுமாரன்.
சாதியே முக்கியம் என்ற கோணத்தில் திரியும் மக்களையும், அதன்பின் விளைவுகளையும் தனது திரைக்கதையின் மூலம் வெளிப்படையாக தெரிவித்திருந்தார் விக்ரம் சுகுமாரன். அந்தத் திரைப்படம் அந்த நேரத்தில் கலவையான விமர்சனத்தை பற்றி இருந்தாலும், பின்னாளில் இயக்குனர் பாராட்டைப் பெற்றார். இதனைத் தொடர்ந்து சாந்தனுவை வைத்து அவர் ராவணக் கோட்டம் திரைப்படத்தை இயக்கினார்.
பெரும் போராட்டத்திற்கு மத்தியில் இந்த திரைப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது. சசிக்குமாரின் கொடிவீரன் திரைப்படத்திலும் அவர் நடித்திருப்பார். இந்த நிலையில் மதுரையில் தயாரிப்பாளர் ஒருவருக்கு கதை சொல்லிவிட்டு திரும்பும்போது விக்ரம் சுகுமாரனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்தும் அவர் உயிரிழந்தார். சென்னை ரெட்ஹில்ஸில் அவரது குடும்பத்தினர் வசித்து வரும் சூழலில், அங்கு இறுதிச் சடங்கு நடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் விக்ரம் சுகுமாரனின் திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்துள்ள தமிழ் திரை உலகினர், ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவித்து வருகின்றனர்.





