கடந்த மாதம் 30ம் தேதி, லியோ இசை வெளியீட்டு விழா சென்னை, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் நடப்பதாக இருந்தது. இவ்விழாவில் கலந்துக்கொள்ள தமிழகம் முழுவதும் உள்ள 234 தொகுதிகளில் இருந்தும், விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகளுக்கு அழைப்பு விடப்பட்டது. இதற்காக அவர்களுக்கு நுழைவு கட்டண டிக்கெட் அனுப்பி வைக்கப்பட்டது.
இதையடுத்து, விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்த சிலர், லியோ விழாவில் அவர்கள் பங்கேற்காமல், விஜயை நேரில் பார்க்க ஆசைப்படும் மற்றவர்களுக்கு அந்த டிக்கெட்டுகளை ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 10 ஆயிரம் வரை விற்றனர். இது, விஜய் மக்கள் இயக்க மாநில நிர்வாகிகளுக்கு மிகப்பெரிய சங்கடத்தை ஏற்படுத்தியது. இதுமட்டுமின்றி, விலை கொடுத்து வாங்கிய இந்த டிக்கெட்டை சிலர், அப்படியே பிரிண்ட் எடுத்தும், ஒரு தரப்பினர் இதுபோலவே போலி டிக்கெட் அடித்தும், பல ஆயிரம் ரூபாய் சம்பாதித்ததும் தெரிய வந்தது.
அதாவது, லியோ இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள அந்த நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் 6 ஆயிரம் பேருக்குதான் இடவசதி உள்ள நிலையில், இந்த மாதிரியான போலி டிக்கெட் விற்பனையால், விழா நாளில் 60 ஆயிரம் பேர் வரை அங்கு வரக்கூடும் என உளவுத்துறை போலீசார் எச்சரித்ததால்தான் அந்த விழாவையே விஜயும், படத் தயாரிப்பாளர் லலித்குமாரும் கலந்து பேசி ரத்து செய்வதாக அறிவித்தனர்.
இப்படி விஜய் ரசிகர்களே, விஜய் நடித்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடக்க விடாமல் தடுத்த சம்பவம், கோலிவுட்டில் பலத்த பரபரப்பபை ஏற்படுத்தியது. விழா நடக்காததற்கு அரசியல் காரணங்கள் கூறப்பட்டாலும், இதுவும் ஒரு முக்கிய காரணம்தான் என தெரிய வந்தது. ஏற்கனவே ஏஆர் ரகுமான் இசை நிகழ்ச்சி ஏற்படுத்திய பிரச்னையும், விழாவை தவிர்க்கும் முக்கிய முடிவை எடுக்க வைத்தது.
இப்போது, விஜய் படம் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், பிரிமியர் ஷோக்களை நடத்த சில தினங்களுக்கு முன் முடிவு செய்யப்பட்டது. அதாவது, தமிழக அரசு ரசிகர் காட்சிக்கு அனுமதி இல்லை என மறுத்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஆனால், இப்போது தினமும் ஒரு காட்சி லியோ சிறப்பு ரசிகர் காட்சி நடத்திக்கொள்ளவும், குறிப்பாக படம் ரிலீஸ் ஆகும் 19ம் தேதி அதிகாலை 4 மணி, காலை 9 மணி என 2 சிறப்பு ரசிகர் காட்சிக்கும் அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதே போல், 24ம் தேதி வரை காலை 7 மணிக்கு சிறப்பு ரசிகர் காட்சி திரையிடவும் அரசு அனுமதி தந்துள்ளது.
இதற்கிடையே பிரிமியர் ரசிகர் காட்சிகளுக்கான ஆயிரக்கணக்கான போலி டிக்கெட்டுகளை அச்சடித்து, மதுரையில் ஏராளமான டிக்கெட்டுகளை மோசடி கும்பல் விற்றுள்ளது. அதுவும் சினிப்பிரியா என்ற தியேட்டரில் இந்த சிறப்பு காட்சி நடப்பதாக போலி டிக்கெட் அச்சடித்து மோசடி கும்பல் விற்று கணிசமான தொகை வசூலித்துள்ளது. அதுபோல், தமிழகத்தின் இன்னும் சில பகுதிகளிலும் இதுபோன்று போலி சினிமா டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாக புகார் எழுந்துவரும் நிலையில், விஜய் ரசிகர்களின் ஆர்வத்தை இப்படி மோசடி கும்பல் தங்களுக்கு சாதகமாக்கி பல ஆயிரம் ரூபாய்களை சம்பாதித்துள்ளனர்.





