நடிகர் சியான் விக்ரம் நடித்துள்ள துருவ நட்சத்திரம் படம் கடந்த 9 ஆண்டுகளாக திரைக்கு வராமல் தாமதமாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் கௌதம மேனன் டைரக்ட் செய்து இருக்கிறார். கதாநாயகியாக ரீத்து வர்மா நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் பார்த்திபன் ராதிகா சரத்குமார் சிம்ரன் போன்றவர்களும் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர்.
துருவ நட்சத்திரம் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் 2017ம் ஆண்டில் முடிவடைந்த நிலையில் 2018ம் ஆண்டில் இந்த படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டது. ஆனால் பல்வேறு பிரச்சனைகள் காரணமாக இந்த படம் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டது.
இந்த படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டதால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் கௌதம மேனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். கடந்த ஏப்ரல் 30ம் தேதி அன்று இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த நிதிச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் விதமான ஒரு உத்தரவை பிறப்பித்தார்.
அதன்படி படக்குழுவினர் பிரத்யேகமாக ஒரு பெயரில் வங்கி கணக்கை தொடங்கி படத்தின் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்ற கண்காணிப்பின் கீழ் கடன்தாரர்களுக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜூன் 15ம் தேதிக்குள் படத்தை வெளியிட அனுமதி வழங்கி உத்தரவிட்டார். மேலும் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்ட பிறகும் குறிப்பிட்ட தேதிக்குள் படத்தை வெளியிட முடியாவிட்டால் கூடுதல் அவகாசம் கோரி நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் அனுமதி வழங்கப்பட்டது.
ஏற்கனவே பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் ஜூன் 15ம் தேதிக்குள் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட முடியாததால் படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி இயக்குனர் கௌதம மேனன் தரப்பில் மீண்டும் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி படத்தை வெளியிடுவதற்கான கால அவகாசத்தை வருகிற ஜூலை 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். 9 ஆண்டுகளாகமுடங்கிக் கிடக்கும் துருவ நட்சத்திரம் திரைப்படம் இந்த ஜூலை மாதம் திரையரங்கிற்கு வருமா என்ற விரக்தியுடன் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.





