இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில், ஷங்கர் தயாரித்த படம் வெயில். பரத் பசுபதி பாவனா நடித்த இந்த படத்தின் மூலம் ஜீவி பிரகாஷ்குமார் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த பாடல்களை தந்து ரசிகர்களை தன் வசம் ஈர்த்தார். படமும் பெரிய வெற்றியை பெற்றது.
குறிப்பாக வெயிலோடு விளையாடி வெயிலோடு உறவாடி பாடலும், உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலித்தது. தொடர்ந்து கிரீடம் பொல்லாதவன் அங்காடி தெரு ஆயிரத்தில் ஒருவன் மதராச பட்டணம் ஆடுகளம் என பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் ஜீவி பிரகாஷ் குமார்தான்.
ஒரு கட்டத்தில் ஜீவி பிரகாஷ்குமார் நடிக்கவும் ஆரம்பித்தார். சிவப்பு மஞ்சள் பச்சை செம திரிஷா இல்லேன்னா நயன்தாரா ஜெயில் டார்லிங் பென்சில் என பல படங்களில் நடித்தார். இப்போது நடிகர் மற்றும் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் முன்னணி கலைஞராக இருக்கிறார். இவர் இசைப்புயல் ஏஆர் ரகுமானின் சகோதரி மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கடந்த ஆண்டில் தனது காதல் மனைவி சைந்தவியை பிரிவதாக ஜீவி பிரகாஷ்குமார் அறிவித்தார். இருவரும் மனப்பூர்வமாக கலந்து பேசி பிரிவதாகவும் கூறியிருந்தார். இவரது மனைவி சைந்தவி ஒரு பின்னணி பாடகி என்பதும் கவனிக்கத்தக்கது.
கடந்த 2013ம் ஆண்டில் காதல் திருமணம் செய்துக்கொண்ட ஜீவி பிரகாஷ் – சைந்தவி தம்பதிக்கு மகள் இருக்கிறார். 11 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு அவர்கள் முற்றுப்புள்ளி வைத்தது, ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது. இருப்பினும் பிரிவுக்கு பிறகும் ஜீவி பிரகாஷ்குமார் இசை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து சைந்தவி பங்கேற்று பாடி வருகிறார். அவரது இசையிலும் பாடுகிறார். இது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பதிலளித்த இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமார் கூறுகையில், நாங்கள் இருவரும் திருமண வாழ்க்கையில் இருந்து பிரிந்துவிட்டோம். ஆனால் ஒருவர் மீது ஒருவர் நிறைய மரியாதை வைத்திருக்கிறோம். அதன் காரணமாக தொழில் ரீதியாக இருவரும் இணைந்து பணியாற்றி வருகிறோம். இது எப்போதும் போல் தொடரும் என்று அவர் கூறியிருக்கிறார்.





