சிறுத்தை படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சிவா. நடிகர் கார்த்தி நாயகனாக நடித்த இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சிறுத்தை சிவா என்றே இயக்குனர் அடைமொழியுடன் அழைக்கப்படுகிறார். நடிகர் அஜீ்த்குமார் நடித்த வீரம் விவேகம் விஸ்வாசம் ஆகிய வெற்றி படங்களை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த என்ற படத்தையும் சிறுத்தை சிவா இயக்கினார்.
தொடர்ந்து தற்போது ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ள கங்குவா படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வரலாற்று பின்னணியை கதைக்களமாக கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. 3டி முறையில் இந்த படம் நாளை உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
இந்த படத்தில் சூர்யாவுடன் யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி கோவை சரளா ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களின் நடித்துள்ளனர். நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. நாளை முதல் பாகமாக இந்த படம் வெளிவரும் நிலையில், 2ம் பாகமும் உருவாக உள்ளது.
கங்குவா படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இந்த படம் மொத்தம் 38 மொழிகளில் 3டி முறையில் உலகம் முழுவதும் நாளை வெளியாக உள்ளது. படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி மக்களிடையே பலத்த வரவேற்பை பெற்றிருக்கிறது. உலகம் முழுவதும் 11,500 தியேட்டர்களில் கங்குவா படம் ரிலீஸ் ஆகிறது. வட இந்தியாவில் மட்டும் 3500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் கங்குவா படம் வெளியாக உள்ளது.
கங்குவா படத்தின் பிரமோஷன் பணிகள் கடந்த 2 வாரங்களாக விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் டிரெய்லர் 2 நாட்களுக்கு முன் வெளியாகி மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை, பாராட்டுகளை பெற்றுள்ளது. படம் நாளை ரிலீஸ் ஆக உள்ள நிலையில், ஆயிரக்கணக்கான திரையரங்குகளில் முன்பதிவு தொடங்கி வேகமாக டிக்கெட் புக்கிங் நடந்து வருகிறது.
கேரளா மற்றும் பெங்களூரு நகரங்களில் உள்ள திரையரங்குகளில் கங்குவா திரைப்படம் சிறப்புக் காட்சியாக நாளை அதிகாலை 4 மணிக்கு துவங்க உள்ளது. தமிழகத்தில் கங்குவா படத்திற்கு தமிழக அரசு ஒரு நாள் மட்டும் சிறப்புக் காட்சி நடத்திக் கொள்ள அனுமதி அளித்துள்ளது. அதன்படி நாளை காலை 9 மணிக்கு கங்குவா படத்தின் முதல் காட்சி ரிலீஸ் ஆகிறது. நாளை ஒருநாள் மட்டும் ஐந்து காட்சிகள் திரையிட்டு கொள்ள தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.





