விஜய் டிவியில் லொள்ளுசபா என்ற காமெடி நிகழ்ச்சி மூலம் விஜய் டிவி பார்வையாளர்களை கவர்ந்தவர் சந்தானம். பிறகு நடிகர் சிம்பு அவரை தனது வல்லவன் மன்மதன் படங்களில் காமெடி கேரக்டரில் நடிக்க வைத்தார். அவரது டைமிங் சென்ஸ் காமெடி ரசிகர்களிடம் நன்றாக ஒர்க் அவுட் ஆனது.
தொடர்ந்து விவேக் வடிவேலு கவுண்டமணி செந்தில் காமெடியை ரசித்த ரசிகர்கள், சந்தானம் காமெடியை ரசிக்க ஆரம்பித்தனர். பிறகு ரஜினி விஜய் அஜீத்குமார் தனுஷ் சூர்யா விக்ரம் என முன்னணி ஹீரோக்களுடன் காமெடி பெரிய அளவில் சந்தானம் காமெடி நடிகராக மாறினார்.
ஒரு கட்டத்தில் ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம் வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தில்லுக்கு துட்டு ஏ1 டிடி ரிடர்ன்ஸ் 2 வடக்குப்பட்டி ராமசாமி போன்ற படங்களில் ஹீரோவாக நடித்து அசத்தினார். 12 ஆண்டுகளுக்கு முன் உருவான மதகஜ ராஜா சமீபத்தில் வெளியான நிலையில் அதில் காமெடியனாக ரசிகர்களை குலுங்க குலுங்க சந்தானம் சிரிக்க வைத்திருக்கிறார்.
அதனால் மீண்டும் நடிகர் சந்தானம் காமெடி கேரக்டர்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்த நிலையில், இரட்டை நாயகர்களில் ஒருவராக இனி காமெடி ரோல் செய்வதாக அவரும் முடிவு செய்திருக்கிறார். ஏற்கனவே ஆர்யா ஜீவா உதயநிதி நடித்த சில படங்களில் சந்தானம் இன்னொரு நாயகனாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இப்போது தில்லுக்கு துட்டு படத்தின் தொடர்ச்சி 3ம் பாகமாக டிடி ரிட்டர்ன்ஸ் நெக்ஸ்ட் லெவல் என்ற படம் உருவாகிறது. இதில் வழக்கம் போல சந்தானம் ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கிய ரோலில் இயக்குனர் கெளதம் மேனனை நடிக்க சந்தானம் அழைத்துள்ளார். ஆனால் இனி டைரக்ஷன் செய்வதே என் நோக்கம். படங்களில் நடிப்பதில்லை என்ற முடிவில் இருக்கிறேன் என்று கௌதம் மேனன் மறுத்திருக்கிறார்.
நீங்கள் இயக்கிய நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நீங்கள் கேட்டுக்கொண்ட ஒரே காரணத்தால்தான் நான் நடித்தேன். அதனால் நீங்கள் இந்த படத்தில் நடித்தே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி பேசி, கௌதம் மேனன் நடிக்க ஓகே வாங்கியிருக்கிறார். மேலும் இந்த படத்தில் கௌதம் மேனன் இயக்கிய படங்களில் உள்ள காட்சிகளையே உல்டா செய்து அந்த காட்சிகளில் கௌதம் மேனன் நடிக்க உள்ளதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.





