அஜித் தற்போது இரண்டு திரைப்படங்களில் பிஸியாக இருக்கிறார். இதில் ஒன்று ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்கும் குட் பேட் அக்லி திரைப்படம். திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் மூலம் ஆதிக் ரவிச்சந்திரன் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். தன்னை எங்கு சென்றாலும் அவர் அஜித் ரசிகராகவே காட்டிக் கொள்வார்.
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்திலும் ஆதிக் நடித்திருந்தார். அப்போது அவருக்கு அஜித் உடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சமயத்தில் அஜித்திடம் ஒரு கதையை கூறியிருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்.
அதற்கு ஓகே கூறிய அஜித், முதலில் ஒரு பிரம்மாண்ட வெற்றியை கொடுத்துவிட்டு வாருங்கள், அதன் பிறகு நாம் தயாரிப்பாளரிடம் பேசலாம் என்று ஊக்கப்படுத்தி இருக்கிறார். இதன் விளைவாகத்தான் மார்க் ஆண்டனி திரைப்படத்தை தான் இயக்கியதாக ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன். அவர் நினைத்தது போலவே அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
அது மட்டுமல்லாமல், மார்க் ஆண்டனி திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் குவித்தது. படத்தில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிகப்பெரிய அளவில் பேசப்பட்டாலும், திரைக்கதையை ரத்திண சுருக்கமாக கச்சிதமாக எடுத்திருந்த ஆதிக் ரவிச்சந்திரனையும் இங்கு பலரும் பாராட்டினார்கள். இதனைத் தொடர்ந்து தான் அவர் அஜித்தோடு இணைந்திருக்கிறார்.
இந்த திரைப்படத்திற்கு குட் பேட் அக்லி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவிஸ் நிறுவனம், முதல்முறையாக தமிழில் இந்த திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைக்கிறார். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்றது. இதன் முதல் போஸ்டர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், இரண்டாவது போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.
இந்த நிலையில் படத்தில் அவர், சிறை கைதியாக நடித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரண்டாவதாக வெளியான போஸ்டரிலும், அஜித் சிறை கைதி உடையிலேயே இருந்தார். அவரது கண்ணாடியிலும் பில்லா படத்தின் புகைப்படம் இடம் பெற்றிருந்தது. ஒருவேளை, அந்தப் படத்தில் நடித்த வேலு கதாபாத்திரத்தின் நீட்சியாக தான் இது இருக்கும் என்று சிலர் கூறி வருகின்றனர். அதேசமயம் குட் பேட் அக்லி திரைப்படம் கிரைம் திரில்லராக உருவாவதாகவும் ஒரு பேச்சு அடிபடுகிறது. வரும் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாவது குறிப்பிடத்தக்கது.





