தமிழ் சினிமாவில் காமெடி கிங் என அழைக்கப்படுபவர் நடிகர் கவுண்டமணி. பாரதிராஜா இயக்கத்தில் கமல் ஸ்ரீதேவி ரஜினிகாந்த் காந்திமதி உள்ளிட்டோர் நடித்த 16 வயதினிலே என்ற படத்தில் அறிமுகமானார். அந்த படத்தில் அவர் பேசிய பத்த வெச்சுட்டியே பரட்ட என்ற டயலாக் இன்று வரை டிரண்டிங்கில் இருந்து வருகிறது.
தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்த கவுண்டமணி காமெடி நடிப்பில் ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைத்தார். குறிப்பாக சுவரில்லாத சித்திரங்கள் பயணங்கள் முடிவதில்லை நான் பாடும் பாடல் வைதேகி காத்திருந்தாள் இதயக்கோவில் சின்னத்தம்பி போன்ற பல படங்கள் கவுண்டமணிக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுத் தந்தது.
குறிப்பாக 1980 – 90களில் கவுண்டமணி செந்தில் இணைந்து நடித்து காமெடி செய்த படங்கள் பெரிய வரவேற்பை வெற்றியை அந்த காமெடி கூட்டணிக்கு பெற்றுத் தந்தது. குறிப்பாக சின்னக்கவுண்டர் கோவில்காளை எஜமான் இந்தியன் அவள் வருவாளா கரகாட்டக்காரன் ஊருவிட்டு ஊருவந்து நான் பெத்த மகனே பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும் போன்ற பல படங்கள் காமெடிக்காக ஓடிய படங்களாக இருந்தன.
இதில் கடந்த 1989ம் ஆண்டில் வெளியான படம் கரகாட்டக்காரன். ராமராஜன் கனகா சண்முகசுந்தரம் காந்திமதி வாகை சந்திரசேகர் கோகிலா சந்தானபாரதி கவுண்டமணி செந்தில் உள்ளிட்டோர் நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இளையராஜா இசையில் படத்தில் பாடல்களை ரசிகர்கள் கொண்டாடினர்.
இந்த படத்தில் கரகாட்ட கோஷ்டியை சேர்ந்த கவுண்டமணி செந்தில் காமெடி இன்றும் ரசிகர்கள் மத்தியில் ரசிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக வாழை பழ காமெடிக்காக அந்த படம் அதிக நாட்கள் ஓடியது. சில தியேட்டர்களில் இந்த படம் 365 நாட்களுக்கு மேல் ஓடியது. பல தியேட்டர்களில் 100 150 200 250 நாட்கள் என ஓடிய வெற்றி விழா படமாக அமைந்தது.
கடந்த 1989ம் ஆண்டில் அதாவது 37 ஆண்டுகளுக்கு முன் இந்த படம் வெளியானது. இந்த படத்தில் நடிக்க நடிகர் கவுண்டமணிக்கு அப்போதே ஒரு நாளைக்கு ரூ 2 லட்சம் வரை சம்பளமாக தரப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கவுண்டமணி பல படங்களில் நடித்த காலகட்டமாக இருந்ததால் ஒரு நாளைக்கு ரூ. 2 லட்சம் என்ற தினசரி சம்பளத்தில் அவர் நடித்திருக்கிறார். அப்படிதான் கரகாட்டக்காரன் படத்தில் நடிக்க பல லட்சங்களை சம்பளமாக கவுண்டமணி வாங்கியிருக்கிறார். அந்த காலகட்டத்தில் ரஜினி கமல் கூட ஒரு படத்துக்கு மொத்த சம்பளமாக வாங்கினார்களே தவிர தினசரி சம்பளமாக ரூ. 2 லட்சம் வரை வாங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.





