நடிகர் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியான படம் அமரன். இதுவரை 325 கோடி ரூபாய்க்கு மேல் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. சிவகார்த்திகேயன் இதுவரை நடித்த படங்களில் அபார வெற்றி, அதிக வசூல் செய்தது அமரன் படம்தான்.
இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்திருந்தது. படத்தை ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார். படத்துக்கு ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார். படத்தில் இடம்பெற்ற மின்னலே ஹே மின்னலே பாடல் பெரிய அளவில் டிரண்டிங் ஆகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
அமரன் படத்தின் வெற்றி விழா இன்னும் சில வாரங்களில் சென்னையில் மிக பிரமாண்டமாக நடைபெற உள்ளது. அமெரிக்காவில் உள்ள படத்தின் தயாரிப்பாளரான நடிகர் கமல்ஹாசன் சென்னை திரும்பியதும் அந்த விழா குறித்த தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. இந்த விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று பரிசு கேடயங்களை வழங்க உள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டு அமரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது. முகுந்த் கேரக்டரில் சிவகார்த்திகேயனும், அவரது மனைவி இந்து ரெபேகா வர்கீஸ் கேரக்டரில் சாய் பல்லவியும் நடித்திருந்தனர். படத்தில் எந்த காட்சியுமே குறை சொல்லாத அளவுக்கு ராஜ்குமார் பெரியசாமி, செதுக்கி செதுக்கி இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னால் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ்குமாரின் இசையும் இரண்டற கலந்துள்ளது. பாடல்களிலும், பின்னணி இசையிலும் அவரது பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு பெரிய அளவில் உதவியது. படத்தை பாராட்டிய பலரும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷின் உழைப்பை, திறமையை சொல்ல மறந்துவிட்டனர்.
ஆனால் கலைத்துறையில் ஊறிய நடிகர் கமல்ஹாசன், ஜீவி பிரகாஷ்குமாரின் உழைப்பு, இசைத்திறமை ஆகியவற்றை உணர்ந்த நிலையில், அவரை பெருமைப்படுத்த முடிவு செய்திருக்கிறார். ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் இயக்க உள்ள கமல் நடிக்கும் அடுத்த படத்தில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைக்க உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. இந்த முடிவை நடிகர் கமலே எடுத்துள்ளதாக தெரிகிறது.





