நடிகர் ஹரீஷ் கல்யாண் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஒரு முக்கிய இளம் நடிகராக இருக்கிறார். நல்ல கதாபாத்திரங்களை கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். ஆரம்பத்தில் அவரது சில படங்கள் போதிய கவனம் பெறாவிட்டாலும் இப்போது கதை தேர்வில் மிகவும் கவனமாக இருந்து தனது படங்களை தேர்வு செய்கிறார்.
பொறியாளன் பியார் பிரேமம் காதல் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் வில் அம்பு தனுசு ராசி நேயர்களே தாராள பிரபு எல்ஜிஎம் கசட தபற போன்ற படங்களில் நடித்த ஹரீஷ் கல்யாணுக்கு பார்க்கிங் படமும் அதைத் தொடர்ந்து லப்பர் பந்தும் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை அடையாளத்தை தமிழ் சினிமாவில் பெற்றுத் தந்தது.
அதிலும் வீட்டு காம்பவுண்ட்டுக்குள் காரை பார்க்கிங் செய்வதில் ஏற்படும் ஈகோ பிரச்னையை மையப்படுத்திய பார்க்கிங் படத்தில் ஹரீஷ் கல்யாண் நடிப்பு வேற லெவலில் இருந்தது. அதே போல் கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்திய லப்பர் பந்து படத்திலும் அவர் அழுத்தமான நடிப்பை தந்திருந்தார்.
நடிகர் ஹரீஷ் கல்யாணை பொருத்த வரை நடிப்பில் நடிகர் சிவகார்த்திகேயனை பின்பற்றி அவரது பாணியில் கதைகளை தேர்வு செய்வது மட்டுமின்றி, படங்களின் பிரமோசனில் கூட அவரையே பின்பற்றுகிறார் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் 12 ஆண்டுகளில் முன்னணி நடிகராக வெற்றி பெற்றவர் எஸ்கே என்பதும் இதில் கவனிக்கத்தக்கது.
அடுத்து நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் ஒரு கோடி வானவில், டீசல் ஆகிய 2 படங்கள் ரிலீஸாக இருக்கின்றன. இதில் ஒரு கோடி வானவில் சில ஆண்டுகளாக முடங்கி கிடந்த நிலையில் இப்போது திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் நடிக்கும் 15வது படம் குறித்து அறிவிப்பு போஸ்டருடன் வெளியாகி உள்ளது.
லிப்ட் படத்தின் இயக்குனர் வினீத் வரபிரசாத் இயக்கத்தில் ஹரீஷ் கல்யாண் தனது 15வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் ஏற்கனவே துவங்கி நடந்து வருகிறது. இந்த படத்தில் நாயகியாக ப்ரீத்தி முகுந்தன் நடிக்கிறார். மலையாள நடிகர் செம்பியான் வினோத் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோரும் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.





