ஜெயிலர் படம் தந்த அபரிமிதமான வெற்றியை தொடர்ந்து, ரஜினிகாந்த் அடுத்து நடித்து முடித்துள்ள படம் வேட்டையன். தசெ ஞானவேல் இயக்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடக்சன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. வருகிற அக்டோபர் 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகிறது.
இப்போது நடிகர் ரஜினிகாந்த் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார். மாநகரம், கைதி, விக்ரம், மாஸ்டர் என மாஸ் ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ், லியோ படத்தில் சொதப்பி விட்டார். விமர்சன ரீதியாக படுதோல்வியடைந்த இந்த படம் லோகேஷூக்கு பெரிய பின்னடைவாக மாறியது.
அதனால் ரஜினி நடிக்கும் கூலி படத்தை பெரிய வெற்றிப் படமாக தரவும், ரஜினி ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு பாட்ஷாவாக, ஜெயிலராக தர வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். கமலுக்கு விக்ரம் போல, இந்த கூலி படத்தை மாஸ் ஹிட் ஆக தரவேண்டும் என்றும் லோகேஷ் கனகராஜ் பிளான் பண்ணி படத்தை இயக்கி வருகிறார்.
இந்த படத்தில் ரஜினியுடன் 38 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சத்யராஜ் இணைந்து நடிக்கிறார். மேலும் கமலின் மகள், பிரபல நடிகை மற்றும் பாடகி ஸ்ருதிஹாசன் ரஜினியின் மகளாக நடிக்கிறார். இனிமேல் என்ற இசை ஆல்பத்தில் ஸ்ருதிஹாசனுடன் இணைந்து லோகேஷ் ரொமாண்டிக் ஆக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூலி படத்தில் மஞ்சும்மெல் பாய்ஸ் நடிகர் சவுபின் சாகிர், நாகர்ஜூனா, உபேந்திரா, ரச்சிதா ராம் உள்ளிட்டோர் நடிப்பதை லோகேஷ் கனகராஜே முறைப்படி அறிவித்து விட்டார். மலையாளம், கன்னடம், தெலுங்கு என ஸ்டார் நடிகர்கள் நடிப்பது உறுதியான நிலையில், இந்தியில் பிரபல நடிகராக இருந்து, கூலி படத்தில் நடிப்பது யார் என்ற கேள்வி எழுந்தது.
இப்போது கூலி படத்தில் பாலிவுட் நடிகர் அமீர்கான் நடிப்பது உறுதியாகி உள்ளது. முதலில் ஷாருக்கான், ரன்வீர் சிங் போன்றவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் அவர்கள் சம்மதிக்காத நிலையில் அடுத்து அமீர்கான் கூலி படத்தில் உறுதியாகி விட்டது. இன்னும் ஓரிரு தினங்களில் அதுகுறித்த அறிவிப்பை படத்தின் இயக்குனர் வெளியிட வாய்ப்புள்ளது.





