சின்னத்திரையில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்து போனாலும், அதில் பல்வேறு சுவாரசியங்களை உள்ளடக்கி ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்ததில் தனித்துவமாக தெரிந்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இது, ரசிகர்களிடம் புதுவித தாக்கத்தை ஏற்படுத்தியது.
சமையல் நிகழ்ச்சியை இத்தனை பொழுதுபோக்கு அம்சங்களாகவும் கொடுக்க முடியும் என்பதை திறம்பட கையாண்டு அதனை ரசிகர்களிடம் எடுத்துச் சென்ற விதத்தில் இதன் முயற்சி பலன் அளித்ததாக பலரும் தெரிவித்தார்கள். குறிப்பாக கொரோனா சமயத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.
சமையல் நிகழ்ச்சியில் போட்டியாளராக வருபவர்கள் ஒரு பக்கம், அவர்களுக்கு உதவுவதற்காக அந்தக் கலையில் எந்த ஒரு விஷயமும் தெரியாதவர்கள் இன்னொரு பக்கம் என கலக்கல் காம்போ இடம்பெற, அதிலிருந்து நகைச்சுவைகளை அள்ளி தெளித்தது குக் வித் கோமாளி ஷோ.
இதன் முதல் இரண்டு சீசன்கள் பட்டித் தொட்டி எங்கும் ரீச் ஆகின. குறிப்பாக அதில் கோமாளிகளாக வந்த பலருக்கும் வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. உதாரணமாக அதில் புகழை கூறலாம். சாதாரண கோமாளியாக வந்த அவர் பெரிய பெரிய நடிகர்களுடன் கூட இணையும் வாய்ப்பைப் பெற்றார்.
இதே போல் அதில் வந்த அஸ்வின், சரத், ரம்யா பாண்டியன், மணிமேகலை என பலரும் மக்களிடம் ரீச் ஆகினர். தொகுப்பாளராக வந்த ரக்ஷனும், வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். தற்போது அவர், ரஜினிகாந்தின் வேட்டையன் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். தற்போது ஹிட்டாகி இருக்கும் மனசிலாயோ பாடலிலும் அவர் வருகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது குக் வித் கோமாளியின் ஐந்தாவது சீசன் நடைபெற்று வருகிறது. அதில் தொகுப்பாளராக மணிமேகலை இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் திடீரென அவர் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். அதில், பங்கேற்றுள்ள பிரியங்காவின் பெயரை குறிப்பிடாமல், அவர் தொகுப்பாளர் விஷயத்தில் தலையிடுவதாகவும், அவரின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகவும் வெளிப்படையாக கூறி இருக்கிறார். மணிமேகலையின் இந்த வீடியோ தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.





