இந்திய அளவில் கவனிக்கப்படும் முக்கிய இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் எஸ்எஸ் ராஜமௌலி. தெலுங்கு சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர். கடந்த 2015ம் ஆண்டில் இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான படம் பாகுபலி. பிரபாஸ் அனுஷ்கா ஷெட்டி ராணா டகுபதி நாசர் சத்யராஜ் ரம்யா கிருஷ்ணன் ரோகிணி தமன்னா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
பாகுபலி படத்துக்கு இசையமைப்பாளர் எம்எம் கீரவாணி இசை அமைத்திருந்தார். இந்த படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. குறிப்பாக அமரேந்திர பாகுபலியாக பிரபாஸ், பல்வால் தேவனாக ராணா டகுபதி, தேவசேனையாக அனுஷ்கா ராஜமாதா சிவகாமி தேவியாக ரம்யா கிருஷ்ணன் கட்டப்பாவாக சத்யராஜ் என இந்த படத்தில் அவர்களது அழுத்தமான அட்டகாசமான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இதையடுத்து பாகுபலி படத்தின் 2ம் பாகம் கடந்த 2017ம் ஆண்டில் வெளியானது. முதல் பாகத்தில் உள்ள பல விஷயங்களுக்கு பதில் சொல்லும் விதமான இந்த 2ம் பாகம் உருவாகி இருந்தது. முதல் பாகத்தை விடவும் 2ம் பாகம் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. அதனால் பாகுபலி திரைப்படம் உலக அளவில் 1800 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து இந்திய சினிமாவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது.
வழக்கமாக ஒரு படத்தை 2 பாகங்களாக தருவதில் இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய கேள்வியும் சந்தேகமும் இருந்தது. ஆனால் பாகுபலி படம் 2 பாகங்களாக வந்து மாபெரும் வெற்றி பெற்ற பிறகுதான் தொடர்ந்து பொன்னியின் செல்வன் விடுதலை ஜெயிலர் போன்ற படங்கள் 2 பாகங்கள் என்ற முக்கியமான முடிவுக்கு வந்தன. 2 பாகங்களாக தமிழ் படங்கள் உருவாக பாகுபலி படம்தான் பிள்ளையார் சுழியாக இருந்தது.
பாகுபலி படம் வெளியாகி இப்போது 10 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், இப்போது பாகுபலி 1 பாகுபலி 2 ஆகிய இரண்டு பாகங்களையும் ஒரே படமாக உருவாக்கியுள்ளனர். இந்த படத்துக்கு பாகுபலி தி எபிக் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 31ம் தேதி ரிலீஸ் செய்யப்படுகிறது என்று அந்த படத்தின் இயக்குனர் ராஜமெளலி தனது எக்ஸ் பக்கத்தில் அறிவித்து இருக்கிறார்.
அதாவது பாகுபலி பாகுபலி 2 ஆகிய 2 படங்களையும் ஒன்றாக இணைத்து 2 படங்களிலும் உள்ள பல காட்சிகளை தவிர்த்து விட்டு, இந்த படத்தை உருவாக்கி உள்ளனர். அதாவது இரண்டு படங்களையும் ஒரே படமாக உருவாக்கி இருக்கின்றனர். இதில் பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் ஆகியவை குறைக்கப்பட்டு இருக்கலாம். படத்தில் சில பிளாஷ்பேக் காட்சிகளும் வருவதால் அவற்றையும் குறைத்திருக்க வாய்ப்புள்ளது. எப்படி இருப்பினும் பாகுபலி படத்தின் 2 பாகங்களையும் ஒரே படமாக பார்க்க இப்போதே சினிமா ரசிகர்கள் ஆர்வமாக தயாராகி விட்டனர்.





