அஜித் குமாருக்கு சமீபத்தில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் பெரிய வெற்றியை கொடுக்கவில்லை. இத்தனைக்கும் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அஜித் குமார் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதால் அதன் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பை வைத்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் இதனை பூர்த்தி செய்ய அந்த திரைப்படம் தவறிவிட்டது என்று கூறலாம்.
குறிப்பாக படத்தின் இரண்டாம் பாதி எதிர்பார்த்ததைப் போல் இல்லை என்று பலரும் புலம்பினர். அதுபோக அஜித்துக்கே உண்டான மாஸ் காட்சிகள் ஏதும் இல்லாதது அவரது ரசிகர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் படத்தின் வசூலும் பெரிய அளவு எடுபடவில்லை.
தமிழ்நாட்டிலேயே 90 கோடி ரூபாய் அளவுக்குத்தான் இந்த திரைப்படம் வசூல் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒட்டுமொத்தமாக 150 கோடி ரூபாய் வரை விடாமுயற்சி பார்த்திருப்பதாகவும், இருப்பினும் அஜித் நடித்த திரைப்படங்களிலேயே வசூல் ரீதியாக பெரிய அளவில் சாதனையை எட்டாத திரைப்படம் இதுதான் என்றும் கூறி வருகிறார்கள்.
இப்படியான சூழலில் தற்போது அனைவரின் எதிர்பார்ப்பும் அஜித்குமாரின் அடுத்த திரைப்படமான குட் பேட் அக்லி மீது விழுந்துள்ளது. இதற்கு மிக முக்கிய காரணம் அதன் இயக்குனரான ஆதிக் ரவிச்சந்திரன். அஜித்தின் தீவிர ரசிகரான இவர் நிச்சயம், படத்தில் மாஸ் காட்சிகளை வைத்திருப்பார் என்று பலரும் கூறுகிறார்கள்.
அதற்கு ஏற்றது போலவே அஜித்தின் தோற்றமும் படத்தில் அமைந்திருக்கிறது. கலர் கலர் சட்டை கண்ணாடி உடல் முழுவதும் டாட்டூ என வேறு ஒரு அஜித்தை இந்த திரைப்படத்தில் பார்க்கலாம் என்று பலரும் கூறி வருகிறார்கள். இதில் திரிஷா, பிரசன்னா அர்ஜுன் தாஸ் தெலுங்கு நடிகர் சுனில் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். வரும் ஏப்ரல் பத்தாம் தேதி இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனை முன்னிட்டு இந்த மாதத்தின் இறுதியில் இருந்து அப்டேட்களை அள்ளி வீச காத்திருக்கிறது படக் குழு. இந்த நிலையில் படத்தில் அஜித் குமாரின் கதாபாத்திரத்திற்கு ரங்கா என பெயர் வைத்திருப்பதாக தகவல் கசிந்துள்ளது. அவருக்கு நண்பனாக வரும் சுனிலுக்கு, அம்பன் என பெயர் வைக்கப்பட்டுள்ளதாம். ஏற்கனவே, மலையாளத்தில் மிகப்பெரிய ஹிட் அடித்த ஆவேசம் திரைப்படத்தில், பகத் பாஸில் பெயருக்கு ரங்கா என்றே பெயர் வைக்கப்பட்டிருக்கும். இதனால் அந்த திரைப்படத்திற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள் ரசிகர்கள்.





