தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். இவருக்கு பிரமாண்ட இயக்குனர் என்ற ஒரு பெயரும் உள்ளது. கடந்த 1990களிலேயே கோடிகளில் படம் எடுத்தவர் ஷங்கர். ஜெண்டில்மேன், காதலன், முதல்வன், ஜீன்ஸ், இந்தியன் என அவரது படங்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட காலங்களாக இருந்தன.
அதன்பிறகும் ஷங்கர் இயக்கிய அந்நியன், சிவாஜி, ஐ, ரோபோ, நண்பன் போன்ற பல படங்கள் பலத்த வெற்றியை பெற்றன. ஆனால் சில மாதங்களுக்கு முன் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான இந்தியன் 2 படம் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. ஷங்கரின் திரை பயணத்தில் இது மிகப்பெரிய சறுக்கலாக இருந்தது.
இந்தியன் படத்துக்கு பிறகு இந்தியன் 2 படத்தை இயக்கிய ஷங்கர், அதே நேரத்தில் இந்தியன் 3 படத்தையும் இயக்கினார். ஒரே நேரத்தில் இந்தியன் 2, இந்தியன் 3 என 2 பாகங்களை எடுத்ததால் அவரால் சரியாக படத்தை தீர்மானிக்க முடியவில்லை. திரைக்கதையில் சொதப்பி விட்டார் என்ற கடும் விமர்சனம் எழுந்தது. மேலும் அனிருத் இசையும் இந்த படத்தில் எடுபடவில்லை.
இதையடுத்து இந்தியன் 3 படத்தை இந்தியன் படத்தை போல பெரிய வெற்றிப் படமாக கொடுக்க வேண்டும் என்பதில் நடிகர் கமல்ஹாசனும், இயக்குனர் ஷங்கரும் மிக தீவிரமாக உள்ளனர். இப்போது கமல் ஏஐ தொழில்நுட்ப பயிற்சிக்காக அமொிக்காவில் தங்கி பயிற்சி பெற்று வருகிறார். ஷங்கரும் கேம் சேஞ்சர் படத்தின் இறுதிகட்ட பணிகளில் மும்முரமாக இருக்கிறார்.
வருகிற ஜனவரி 10ம் தேதி ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, எஸ்ஜே சூர்யா, அஞ்சலி நடித்த கேம் சேஞ்சர் படம் வெளியாகிறது. அதே போல் கமலும் அமெரிக்காவில் இருந்து இன்னும் சில வாரங்களில் சென்னை திரும்ப உள்ளார். கேம்சேஞ்சர் படத்துக்கு பிறகு இயக்குனர் ஷங்கரும் நடிகர் கமலும், இந்தியன் 3 படத்தில் முழு கவனம் செலுத்த உள்ளனர்.
ஏற்கனவே திட்டமிட்டபடி இந்தியன் 3 படத்தை ஒரு மாதம் வரை ரீ ஷூட் நடத்த கமல் கூறியிருக்கிறார். அதனால் ஷங்கரும் அதற்காக ஆயத்தமாகி வருகிறார். இந்த ஒரு மாத ரி ஷூட் பட்ஜெட்டாக, படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனத்திடம் ரூ. 100 ஆகும் என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார். இந்தியன் 2 படம் தந்த பலத்த அடியில் நஷ்டத்தில் இருந்து மீள முடியாமல் திணறி வரும் லைகா நிறுவனம், மீண்டும் ரூ. 100 கோடியா என தலை கிறுகிறுத்துப் போய் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.





