தமிழ் சினிமாவில், தமிழக அரசியலில் கொடி கட்டிப் பறந்தவர் கேப்டன் விஜயகாந்த். ஒரு காலகட்டத்தில் புகழின் உச்சியில் இருந்த அவரை நோய் என்ற தீயசக்தி அவரை முடக்கிப் போட்டது. பல்வேறு நோய் தாக்கத்தால், உடல் உபாதைகளால், முதுமை தந்த பலவீனத்தில் அவரை முடங்க வைத்து, இப்போது மறைய செய்துவிட்டது.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு, ஒரு மலையாள நாளிதழ் கஜேந்திரா படப்பிடிப்புக்காக அவர் கேரளா வந்திருந்த போது அளித்த பேட்டியை இப்போது வெளியிட்டுள்ளது. அதில் பல முக்கிய, யாரும் அறியாத ஆச்சரியமான பல தகவல்கள் உள்ளன. அதில் அவர் தமிழ் படங்களில் நடிக்க வருவதற்கு முன் அடிக்கடி திருவனந்தபுரத்துக்கு நண்பர்களுடன் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக ஓணம் பண்டிகைக்கு கேரளா சென்றுவிடுவது விஜயகாந்தின் வாடிக்கை.
விஜயகாந்தின் பால்ய கால நண்பர் சுந்தர்ராஜன் என்பவரது சகோதரி முத்துலட்சுமி வீடு திருவனந்தபுரத்தில் இருந்துள்ளது. அவரது கணவர் கண்ணன் நகைக்கடை நடத்தியுள்ளார். அப்போது நண்பர் சுந்தர்ராஜனுடன் முத்துலட்சுமி, கண்ணனை பார்க்க அங்கு சென்றுவந்த அங்குள்ள ஸ்ரீகுமார் தியேட்டரில் சத்யன், ஜெயன் போன்றவர்கள் நடித்த மலையாள ஆக்சன் படங்களை விரும்பி பார்ப்பது வழக்கம்.
அவர் தனது வாழ்நாள் முழுவதும் தமிழ் சினிமாவில் மட்டுமே நடித்தார் என்றாலும், நடிக்க ஆசைப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் மலையாள படங்களில் நடிக்க முயற்சித்திருக்கிறார். ஆனால் செக்கச்சிவந்த சேட்டன்கள் மத்தியில் விஜயகாந்தின் கருப்பு நிறம் பிடிக்காமல் போய், அவருக்கு வாய்ப்புத் தர முன்வரவில்லை.
தன்னை கருப்பு நிறம் என ஒதுக்கிய மலையாள படவுலகில் வாய்ப்புகளை விஜயகாந்த் தேடிக்கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது முத்துலட்சுமியின் கணவர் கண்ணன் இறந்துவிட, அவர் நடத்தி வந்த நகைக்கடையை விஜயகாந்த் ரூ. 7 லட்சம் கொடுத்து வாங்கி நடத்தியுள்ளார். ஒரு கட்டத்தில் நகை வியாபாரம் எதிர்பார்த்த அளவில் இல்லாததால், நகைக்கடையை விஜயகாந்த் விற்றுவிட்டார்.
விஜயகாந்தை கருப்பு நிறம் என்று மலையாள சினிமா உலகம் மறுத்தாலும், தமிழ் சினிமா அவரை ஏற்றுக்கொண்டது. பிறகு விஜயகாந்தின் வெள்ளை மனதை அறிந்த ரசிகர்களால், அவருக்கு கருப்புநிலா என்ற பட்டமும் அவருக்கு கிடைத்தது. ஒருவேளை மலையாள சினிமாவுலகில் அவருக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால், தமிழ் சினிமாவுக்கு கேப்டன் என்ற ஆளுமை நிறைந்த அந்த சிறந்த நடிகர் கிடைக்காமலேயே போயிருப்பார்.





