கடந்த ஆண்டில் நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான படம் மெய்யழகன். அதன்பிறகு கடந்த பல மாதங்களாக கார்த்தி நடித்த எந்த படமும் வெளியாகவில்லை. சர்தார் 2 மார்ஷல் வா வாத்தியார் என படங்களில் கார்த்தி தொடர்ந்து நடித்த நிலையில் அவரது படம் எதுவும் இந்த ஆண்டு முழுவதும் ரிலீஸாகாமல் இருந்தது கார்த்தியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருந்தது.
இந்நிலையில் நலன்குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்த வா வாத்தியார் படம் வருகிற 12ம் தேதி ரஜினிகாந்த் பிறந்த நாளில் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த படத்தின் ஷூட்டிங் துவங்கி 2 ஆண்டுகளாக நடந்த நிலையில் படப்பிடிப்பு பல காரணங்களால் தடைபட்டு தடைபட்டு நடந்து ஒரு வழியாக முடிந்தது.
படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவித்து அறிவித்து தள்ளி போடப்பட்ட நிலையில் கார்த்தி ரசிகர்கள் விரக்தியடைந்தனர். இந்த சூழலில் வருகிற 12ம் தேதி நிச்சயமாக வா வாத்தியார் படம் திரைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் இருந்தனர். இந்த படத்தில் ராஜ்கிரண் சத்யராஜ் கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோரும் நடித்திருக்கின்றனர்.
இந்நிலையில் அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றை செய்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது, வா வாத்தியார் படத்தை தயாரித்துள்ள ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தங்களிடம் 10.39 கோடி ரூபாய் கடன் வாங்கி இருந்தது. அந்த கடன் வட்டியுடன் சேர்த்து 21.78 கோடி ரூபாய் தங்களுக்கு திருப்பி தர வேண்டும். அந்த கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்தும் வரை இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், வா வாத்தியார் படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து விளக்கம் தருமாறு ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பிய நீதிபதி வழக்கு விசாரணையை தள்ளி வைத்துள்ளார்.
மீண்டும் வருகிற 8ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது. அதற்குள் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் வாங்கிய கடனை வட்டியுடன் செட்டில் செய்ய வேண்டிய நிர்பந்தம் உருவாகி உள்ளது. அதனால் வா வாத்தியார் படம் குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆவதில் திடீர் சிக்கல் ஏற்பட்டுள்ளது. வருகிற 12ம் தேதி வா வாத்தியார் படம் வருவது கேள்விக்குறியான நிலையில் கார்த்தி ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர்.





