இயக்குனர் ஏ ஆர் முருகதாஸிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் ராஜ்குமார் பெரியசாமி. இவரது முதல் திரைப்படமாக எடுக்கப்பட்டது ரங்கூன் திரைப்படம். கௌதம் கார்த்திக் இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். முருகதாஸின் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் தயாரித்திருந்தது.
இந்த திரைப்படம் வசூல் ரீதியாக கொண்டாடப்படவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றது. இதற்குப் பிறகு நீண்ட காலம், எந்த திரைப்படங்களையும் எடுக்காமல் இருந்தார் ராஜ்குமார் பெரியசாமி. பிறகுதான் அவரது கை வண்ணத்தில் உருவாகியது அமரன் திரைப்படம்.
கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்க முன் வந்தது. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்த இந்தத் திரைப்படம் கடந்த தீபாவளிக்கு வெளியானது. ராணுவத்தில் வீர மரணம் அடைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையைத்தான் இதில் படமாக்கினார்கள். ஆனால் சோகமான முடிவை கொண்ட ஒரு திரைப்படம் தீபாவளிக்கு மக்களை கவருமா என்பது சந்தேகம் தான் என்று பலரும் கூறி வந்தார்கள்.
ஆனால் இந்த கேள்வியை எல்லாம் தவிடு பொடியாக்கியது அமரன் திரைப்படம். சிவகார்த்திகேயன் படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் திருவிழா கோலம் போன்றது. அப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என்று யாருமே எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். அமரன் திரைப்படத்தில் பலரும் குடும்பம் குடும்பமாக பார்க்க திரையரங்குகளுக்கு படை எடுத்தார்கள்.
இந்தத் திரைப்படத்தின் வெற்றிக்கு மிக முக்கிய காரணம் சாய் பல்லவியின் நடிப்பு தான். கணவரை பிரிந்திருக்கும் போது இருக்கும் ஏக்கம், அவருடன் நட்பு பாராட்டுவது என தான் அடித்த ஒவ்வொரு காட்சிகளிலும் கலக்கி இருந்தார் சாய்பல்லவி. இதன் காரணமாகவே அமரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. சொல்லப்போனால் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே இது 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் ஈட்டி சாதனை படைத்தது.
இப்படியான சூழலில் அதன் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி அடுத்ததாக நடிகர் தனுஷ் உடன் இணைந்து இருக்கிறார். கோபுரம் பிலிம்ஸ் சார்பில் அன்புச் செழியன் இதனை தயாரிக்க உள்ளார். சமூகத்தில் கவனிக்கப்படாத ஹீரோக்களின் கதை தான் இது என்று படம் குறித்து பேசி இருக்கிறார் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி. அப்படி என்றால் நிச்சயம் இதுவும் ஒரு பயோபிக் திரைப்படம் தான் என்று சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.





