நடிகர் விஜய் இப்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்தில் நடித்து வருகிறார். வரும் ஜூன் 13ம் தேதி இந்த படம் திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது ஒரு டைம் டிராவல் கதைதான். அரசியல் பின்னணி கொண்ட படம் அல்ல. ஆக்ஷன் மூவியாக, விஜய் டபுள் ரோல் செய்திருக்கும் படம் இது.
விஜயின் நடவடிக்கைகளில் சமீபகாலமாக நிறைய மாற்றங்கள் தெரிகிறது. குறிப்பாக அதிக கூட்டம் உள்ள பகுதிகளுக்குச் செல்வதை எப்போதுமே விரும்பாத விஜய், கேப்டன் மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்த வந்து அவ்வளவு கூட்டத்தில் வந்து சிக்கிக்கொண்டர். அங்கு சில தகாத சம்பவங்களும் நடந்தது.
ஆனால் அதற்காக பெரிதும் வருத்தப்படாமல், அதற்கடுத்த 2வது நாளில் திருநெல்வேலியில் நடந்த, தென்மாவட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் சந்தோஷமாக கலந்துக்கொண்டார். அங்கு விழா நடந்த ஹாலுக்கு வந்த போது முதுகில் யாரோ மோதியதால், தடுமாறிய விஜய் அதையும் பெரிதுபடுத்தவில்லை.
இதனிடையே இப்போது சென்னை கோவளம் பகுதியில் நடந்து வரும் ஷூட்டிங்கில், தினமும் தன்னை காண திரண்டு வரும் ரசிகர்களுக்காக அங்கு நிறுத்தப்பட்டுள்ள பஸ்சின் மீது ஏறி நின்று செல்பி எடுத்து, வீடியோ பதிவிட்டு ரசிகர்களிடம் அதிக நெருக்கத்தை காட்டி வருகிறார்.
இதுகுறித்து சினிமா விமர்சகர் மூத்த சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறுகையில், நடிகர் விஜய் முன்பு இருந்த மாதிரி இல்லை. இப்போது நிறைய மாறி விட்டார். கோட் படம் கூட அவரது தற்காலிக கடைசி படமாக இருக்கலாம். ஏனெனில் விஜய் மக்கள் இயக்கத்தை அவர் அரசியல் கட்சியாக மாறி, 2026 சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளார்.
விஜய் மீதுள்ள குற்றச்சாட்டே, இவர் ரசிகர்களை சந்திக்க மாட்டார், பிரஸ்மீட் தர மாட்டார். அவரது பட விழாக்களில் மட்டுமே கலந்துக்கொள்வார். இவர் எப்படி அரசியல் கட்சி ஆரம்பித்து, மக்கள் மத்தியில் வருவார் என்பதுதான். அதையெல்லாம் உடைத்தெறிந்து உங்கள் மத்தியில், உங்கள் அருகில் நான் இருக்கிறேன் என்பதை நிரூபிக்கிற வகையில், இந்த மாற்றத்தை அவர் செய்து வருகிறார், என்று செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.





