தமிழ் சினிமாவில் ஏழை எளிய மக்களுக்கு வாரி வழங்கியவர் என்ற புகழுக்கு சொந்தக்காரர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர். அதே வரிசையில் கருப்பு எம்ஜிஆர் என அழைக்கப்பட்ட நடிகர் விஜயகாந்தும் ஏராளமான உதவிகளை தன்னால் இயன்ற அளவுக்கு மக்களுக்கு செய்திருக்கிறார். தனது பிறந்த நாளை கூட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக தான் அவர் நடத்தியிருக்கிறார்.
குறிப்பாக சினிமா வாய்ப்புக்காக ஆரம்ப காலத்தில் ஸ்டுடியோ ஸ்டுடியோவாக ஏறி இறங்கிய நாட்களில் உணவுக்காக மிகவும் கஷ்டப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். அதனால் அவர் வளர்ந்து பெரிய நடிகரான பிறகு தன்னால் இயன்ற வரை பசியோடு வந்தவர்களுக்கு உணவு பரிமாறி இருக்கிறார். எப்போதுமே தனது வீட்டில் அலுவலகத்தில் உணவு வழங்கும் ஏற்பாட்டை செய்தவர் கேப்டன் விஜயகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வரிசையில் நடிகர் சூர்யா, கல்வி நலனுக்காக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார். சமீபத்தில் ரெட்ரோ பட வெற்றி விழாவில் அகரம் பவுண்டேசன் அறக்கட்டளைக்காக ரூ. 10 கோடியை நன்கொடையாக வழங்கியிருக்கிறார் சூர்யா. அதே போல் நடிகர் விஜய் ஆண்டுதோறும் 10ம் வகுப்பு பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ மாணவியருக்கு கல்வி விருதுடன் ரொக்கப் பரிசு வழங்கி வருகிறார். அந்த வரிசையில் மாஸ்டர் ராகவா லாரன்ஸ்சும் பல உதவிகளை தனது மாற்றம் சேவை அமைப்பின் மூலம் செய்து வருகிறார்.
உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜாக்கிசான். ஆக்சன் ஸ்டண்ட் காட்சிகளில் ஜாக்கிசான் போல உயிரை பணயம் வைத்து நடிப்பவர்கள் எந்த நடிகரும் இருக்க முடியாது. அந்த அளவுக்கு பல ரிஸ்க்கான காட்சிகளில் டூப் போடாமல் நடித்து பலமுறை விபத்துகளில் சிக்கியவர். இதற்காக அவரது உடலில் 52 இடங்களில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டவர் தான் நடிகர் ஜாக்கிசான்.
கராத்தே கிட் டிரங்கன் மாஸ்டர் ரஷ் ஹவர் போலீஸ் ஸ்டோரி 1985 என பல ஹிட் திரைப்படங்களில் ஜாக்கிசான் நடித்திருக்கிறார். அடுத்ததாக ஜாக்கிசான் நடிப்பில் கராத்தே கிட் படத்தின் 2ம் பாகம் வெளிவர உள்ளது. இந்த படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் நடிகர் ஜாக்கிசான் தனது 3400 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை தானமாக வழங்கியிருக்கிறார்.
ஏழை எளிய மக்களின் கல்விக்காகவும் இயற்கை பேரிடர் காலங்களில் பயன்படுத்திக் கொள்ளவும் ஜாக்கிசான் சாரிட்டபிள் பவுண்டேஷன் மூலம் 3400 கோடி ரூபாய் நன்கொடையாக வழங்கி இருக்கிறார். இதுகுறித்து நடிகர் ஜாக்கிசான் கூறியதாவது, நான் சிறு வயதில் ஏழ்மையில் தவித்து இருக்கிறேன். அவர்களுடைய கஷ்டம் எனக்கு நன்றாக தெரியும். உதவி செய்யும்போது அவர்கள் படும் சந்தோஷம் என்னையும் மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது என்று கூறியிருக்கிறார். 3400 கோடி ரூபாய் சொத்துகளை மக்கள் நலனுக்காக தானமாக வாரி வழங்கிய நடிகர் ஜாக்கிசானை பலரும் பாராட்டி வாழ்த்தி வருகின்றனர். இந்த தகவல் இணையத்தில் வைரலாகிறது. வாரி வழங்குவதில் இன்னொரு எம்ஜிஆராக ஜாக்கிசான் என்றும் அவரது புகழ் பாடி உள்ளனர்.





