இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் ஜெயிலர் 2 திரைப்படம் வருகிற 15ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்த நிலையில் படத்தின் டிரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது. திலீப் என்ற கேரக்டரில் நடித்துள்ள வில்லன் வெஞ்சரமூடு, தனது அடியாட்களிடம் முத்துவேல் பாண்டியன் ரஜினிகாந்த் பற்றி விசாரிப்பதில் டிரெய்லர் தொடங்குகிறது.
யார்டா அவன், எங்க இருக்கிறான், அவனை பத்தி தகவல் தெரிஞ்சுதா என்று கேட்க, அடியாட்கள் தெரியலே என்று பதில் கூறுகின்றனர். தனது மகனின் மறைவுக்குப் பிறகு தன் அடையாளத்தை மறுத்துக் கொண்டு கார் டிரைவர் ஆக வாழும் முத்துவேல் பாண்டியன் கல்பக்ஸ் என்ற கடத்தல் கும்பலை தேடி கண்டுபிடித்து தன் பாணியில் வேட்டையாடுவதை டிரெய்லர் காட்டுகிறது.
இந்த 2.24 நிமிட டிரெய்லரில் ஏற்கனவே போதி கேரக்டரில் நடிகர் எஸ்ஜே சூர்யா திலீப் ஆக சுராஜ் வெஞ்சரமூடு, காந்தா கேரக்டரில் நடிகை வித்யா பாலன் தோற்றம் வெளியாகி ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பை கிளப்பி இருந்தது. இவர்களுடன் டிரெய்லரில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் மலையாள மோகன்லால் சிறப்பு தோற்றங்களில் வந்து இன்னும் ரசிகர்களிடம் உற்சாகத்தை அதிகரிக்க செய்திருக்கின்றனர்.
இதில் ஒரு காட்சியில் காந்தாவாக வரும் வித்யாபாலன், காபி வேண்டுமா டீ வேணுமா என்று ரஜினியிடம் கேட்க அவர் வேண்டாம் என்று மறுக்கிறார். உனக்கு வேணுமா, வேண்டாமான்னு கேட்கலே, காபி டீ இரண்டில் எது உனக்கு வேண்டும் என்பதுதான் கேள்வி என்று அவர் வாயில் சிகரெட் புகை விட்பபடி மிரட்டல் தொனியில் கேட்பது ட்ரெய்லரில் இடம் பெற்றுள்ளது.
மேலும் படத்தில் இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு நமோ நாராயணா உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கடந்த 2023ம் ஆண்டில் வெளியான ஜெயிலர் படத்தின் தொடர்ச்சியாக இந்த ஜெயிலர் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார், ஜெயிலர் 2 டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
அதில் ஒரு காட்சியில், இந்த கேமரா வைக்கிறது கேப்மாரித்தனம் பண்றது ஆளை தூக்கறது எதிரிகளை மிரட்டறது இதெல்லாம் உங்க டாடி காலத்து ஸ்டைல், இந்த காலத்து ஸ்டைல் என்னன்னா எதிரிகளை எல்லாம் ஒரு இடத்துக்கு மொத்தமா வரவைச்சு பாம் வைக்கிறது என்று மாஸ் காட்டி ரஜினிகாந்த் பேசியிருக்கிறார். ஆக மொத்தம் ஜெயிலர் படம் போலவே இதுவும் கேங்ஸ்டர் படமாக வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.





