நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வரும் செப்டம்பர் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் ( தி கோட்) படம் ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்த படம், குறிப்பிட்ட தேதியில் ரிலீஸ் ஆகுமா என்பதில், கடந்த சில தினங்களாக குழப்பம் நீடித்து வருகிறது.
ஏனென்றால் இந்த படத்தில் பிளாஸ்பேக்கில் நடிகர் விஜயை இளமையாக காட்ட டீஏஜிங் தொழில் நுட்பம் செய்யப்பட்டுள்ளது. விஜயை மட்டுமின்றி அவருடன் நண்பர்களாக நடித்துள்ள பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் போன்றவர்களையும் இளமையானவர்களாக பிளாஸ்பேக்கில் காட்ட அவர்களுக்கும் டீஏஜிங் தொழில்நுட்பம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் படத்தில் வில்லன் கேரக்டர் என்று கூறப்படும் மைக் மோகனுக்கும் டீ ஏஜிங் செய்யப்பட்ட நிலையில், இந்த படத்தில் கிரீன்மேட் காட்சிகளும் மிக அதிகம் என்று கூறப்படுகிறது. இது ஒரு டைம் டிராவல் சயன்ஸ்டிபிகேசன் கதை என்பதால் நிறைய விஎப்எக்ஸ் சிஜி தொழில்நுட்ப பணிகள் அதிகளவில் உள்ளன.
மேலும் மறைந்த நடிகர்கள் கேப்டன் விஜயகாந்த், விவேக் போன்றவர்களையும் இந்த படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தில் நடிக்க வைத்திருப்பதால், அவர்களை பொம்மை போல காட்டாமல், அவர்களே நிஜத்தில் நடித்தது போல காட்டவும் விஜய், வெங்கட்பிரபுவுக்கு அறிவுறுத்தி உள்ளார். இந்த காட்சிகள் சரியாக இல்லாமல், அவர்களை அவமதித்தது போல் ஆகிவிடும் என்றும் படக்குழுவினரை எச்சரித்துள்ளார்.
அதனால், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ்சில் உள்ள ஸ்பெஷல் சினிமா ஸ்டுடியோவில் நடந்துவரும் சிஎப்எக்ஸ், சிஜி, டீஏஜிங் பணிகள் தாமதமாகும் என்றும், ஆகஸ்ட் இறுதி வரை நீடிக்கும் என்றும் கூறப்பட்டது. மேலும், சினேகா உள்பட பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன் நடிக்க வேண்டிய காட்சிகள் 17 வரை மீதம் இருப்பதால், குறிப்பிட்ட தேதியில் படம் ரிலீஸ் ஆவது சிக்கல், படம் தள்ளிப்போகும் என்றும் தகவல் பரவியது.
இதுகுறித்து ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் கொடுத்துள்ள விளக்கத்தில், குறிப்பிட்ட தேதியில் தி கோட் படம் ரிலீஸ் ஆகும். அதில் எந்த மாற்றமும் இருக்காது. இதுவரை 75 சதவீத தொழில்நுட்ப பணிகள் முடிவடைந்துள்ளது. அதுவரை படம் மிக சிறப்பாக, எதிர்பார்த்ததை விட மிக திருப்தியாக, அருமையாக வந்துள்ளது. மேலும், இன்னும் ஒரு நாள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி உள்ளது. அதுவும் சினேகா உள்ளிட்ட சக நடிகர்கள் நடிக்க வேண்டிய சின்ன சின்ன காட்சிகள்தான். அது ஒரே நாளில் முடிந்துவிடும் என்றும் கூறப்பட்டுள்ளது.





