நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் படம் ஜனநாயகன். இது அவரது 69வது படமாகும். பெங்களூருவை சேர்ந்த கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எச் வினோத் இயக்கத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற 2026ம் ஆண்டில் ஜனவரி மாதம் பொங்கலுக்கு இந்த படம் வெளியாக உள்ளது.
இது நடிகர் விஜயின் கடைசி படம். அதனால் இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஏற்கனவே விஜய் படங்கள் என்றாலே பாக்ஸ் ஆபீஸில் வசூல் அனல் பொறி பறக்கும். இந்த படத்துக்கு தீயாக வசூல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இந்த படத்துக்கு கோலிவுட் வட்டாரத்தில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்து வருகிறது.
சதுரங்க வேட்டை தீரன் அதிகாரம் 1 நேர்கொண்ட பார்வை வலிமை துணிவு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் எச் வினோத். விஜய் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் இந்த படம் நிச்சயமாக மாஸ் ஹிட் படமாக தான் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. அதனால் இந்த படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்ய பெரிய போட்டி நிலவி வருகிறது.
ஜனநாயகன் படத்தை தமிழ்நாடு தியேட்டர்களில் ரிலீஸ் செய்யும் உரிமை பெற விஜய் நடித்த தி கோட் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம், அந்த படத்தை ரிலீஸ் செய்த வினியோகஸ்தர் ராகுல் மற்றும் லியோ படத்தின் தயாரிப்பாளர் எஸ் எஸ் லலித்குமார் ஆகிய 3 பேருக்கும் இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
இதில் வினியோகஸ்தர்கள் ராகுல் மற்றும் லலித்குமார் ஆகிய இருவரும் ரூ. 100 கோடிக்கு வியாபாரம் பேசிய நிலையில் இந்த போட்டியில் இருந்து ஏஜிஎஸ் நிறுவனம் விலகி விட்டது. இப்போது இந்த 2 பேரில் யாருக்கு தமிழ்நாட்டில் ஜனநாயகன் படத்தை தியேட்டர்களில் வெளியிடும் உரிமையை தருவது என்பதில் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதில் நடிகர் விஜய் நடித்த தி கோட் படத்தை ரிலீஸ் செய்தவர் ராகுல், லியோ படத்தை தயாரித்தவர் எஸ்எஸ் லலித்குமார். மேலும் விஜயின் நெருங்கிய நண்பரும் கூட. இந்த நிலையில் இந்த பிரச்னை குறித்து நடிகர் விஜயின் கவனத்துக்கு தயாரிப்பு நிறுவனம் கொண்டு சென்றது. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, யோசிச்சு சொல்றேன் என்று படத்தின் நாயகன் நடிகர் விஜய் கூறிய நிலையில் யாருக்கு ஓகே சொல்லப் போகிறார் தளபதி என கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம் காத்திருக்கிறது.





