நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் கடந்த 9ம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் கேவிஎன் புரடக்சன்ஸ் அறிவித்தது. ஆனால் குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள் ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத நிலையில் படத்தை வெளியிட முடியாத நெருக்கடி ஏற்பட்டது. அதனால் இந்த படம் கடந்த 9ம் தேதி ரிலீஸ் ஆகவில்லை. இது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை தந்தது.
ஜனநாயகன் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சென்சார் போர்டு தணிக்கை சான்றிதழ் தராதது குறித்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் யு/ஏ சான்றிதழ் தர சென்சார் போர்டுக்கு தனிநீதிபதி உத்தரவிட்டார். இதுகுறித்து சென்சார் போர்டு மேல் முறையீடு செய்ததால், நீதிபதிகள் அமர்வு தனிநீதிபதி உத்தரவை ரத்து செய்து இந்த வழக்கை வரும் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தது.
அதனால் கேவிஎன் புரடக்சன்ஸ் நிறுவனம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கை ஏற்க மறுத்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு, சென்னையில் நடக்கும் வழக்கில் உங்கள் பிரச்னைகளை பேசிக்கொள்ளுங்கள். இந்த வழக்கில் நாங்கள் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக மறுத்து இந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த நிலையில் வருகிற 21ம் தேதி இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது. இதில் எந்த மாதிரியான முடிவு கிடைக்கும் என்பது தெரியவில்லை. இதற்கிடையே ஜனநாயகன் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட படத்தின் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் உண்மையில் ஜனநாயகன் படம் ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்பில்லை. ஏனென்றால் இந்த படம் விஜய் ரசிகர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட அரசியல் பிரசார படமாகவும் உள்ளது. அது மட்டுமின்றி விஜய்க்கு இது அரசியல் படமாகவும் தயாரிப்பு நிறுவனத்துக்கு கணிசமான லாபத்தை தர வேண்டிய வியாபாரமும் இதில் அடங்கியுள்ளது.
தியேட்டரிக்கல் பிஸினஸ் மூலமாக இந்த படம் ரூ. 359 கோடி வரை வர்த்தகம் நடந்துள்ள நிலையில் இந்த படத்தை வெளியிட விரும்பும் தயாரிப்பு நிறுவனம் அவ்வளவு பெரிய விலை கொடுத்து இந்த படத்தை வாங்கவும் வாய்ப்பில்லை. அதனால் எத்தனை நாட்கள் தாமதம் ஆனாலும் ஜனநாயகன் படம் தியேட்டரில்தான் வெளியாக மட்டுமே அதிகம் வாய்ப்பு என்ற லேட்டஸ்ட் தகவல் வெளியாகி உள்ளது.





