நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்துக்கு சென்சார் போர்டு சான்றிதழ் தராமல் இழுத்தடித்த நிலையில் இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் படத்தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதில் தனி நீதிபதி ஆஷா கடந்த 9ம் தேதி இந்த படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தந்து படத்தை சான்றிதழ் செய்ய அனுமதிக்குமாறு சென்சார் போர்டு உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பை ஏற்க மறுத்த சென்சார் போர்டு தரப்பில், இதுகுறித்து சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கை அன்று மதியமே விசாரித்த 2 நீதிபதிகள் அமர்வு, தனிநீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும் வருகிற 20ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்த நீதிபதிகள் அமர்வு, இதுகுறித்து பதில் மனு தாக்கல் செய்யவும் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில டெல்லியில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் இதுகுறித்து பட நிறுவனம் மேல் முறையீடு செய்தது. ஜனநாயகன் படத்துக்கு நீதிபதிகள் விதித்த தடை உத்தரவை விலக்க வேண்டும் என்று மனுவில் கேட்டுக்கொண்டது. கடந்த 15ம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அமர்வு இதற்கு மறுப்பு தெரிவித்து விட்டது.
ஜனநாயகன் படம் ரிலீஸ் விவகாரத்தில் படத்தின் தயாரிப்பு நிறுவனம் இவ்வளவு அவசரம் காட்டுவது ஏன்? சென்னை ஐகோர்ட்டில் நடக்கும் விசாரணையில் உங்கள் பிரச்னைகளை சொல்லுங்கள். இந்த வழக்கில் நாங்கள் தலையிட முடியாது என்று கூறி அந்த வழக்கை தள்ளுபடி செய்துவிட்டது.
இந்த சூழலில் இன்று சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் ஜனநாயகன் ரிலீஸ் சென்சார் சான்றிதழ் வழங்காதது குறித்த வழக்கு விசாரணை நடந்தது. சென்சார் போர்டு மற்றும் தயாரிப்பு நிறுவனம் சார்ந்த இரு தரப்பு வாதங்களையும் கேட்டுக்கொண்ட நீதிபதிகள் அமர்வு, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது.
அதனால் ஜனநாயகன் படம் ரிலீஸ் தேதி குறித்த இறுதி தீர்ப்பு எப்போது என்பது தெரியாது. ஒருவேளை வருகிற மே மாதம் சட்டசபை தேர்தலுக்கு முன்பு அந்த படம் வந்தால் தளபதி விஜய் நடித்த படமாக திரையில் வரும். அல்லது சட்டசபை தேர்தலுக்கு பிறகு வந்தால் திரையில் தமிழக முதல்வர் விஜய் நடித்த படமாக அது இருக்கும் என்று ரசிகர்கள் விரக்தியாக கூறி வருகின்றனர்.





