பீட்சா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கார்த்திக் சுப்புராஜ். ஆரம்பத்தில் குறும்படங்களை இயக்கி வந்த அவர், நாளைய இயக்குனர் நிகழ்ச்சியின் மூலம் வெளிச்சத்திற்கு வர, அங்கிருந்து எடுக்கப்பட்ட தனது பீட்சா படக் கதையை வெள்ளி திரைக்கு கொண்டுவந்து பிரபலமடைந்தார்.
இறைவி, பேட்ட, மகான், ஜகமே தந்திரம் உள்ளிட்ட திரைப்படங்கள் எடுத்தாலும் கார்த்திக் சுப்புராஜின் மாஸ் அண்ட் கிளாஸ் திரைப்படம் எதுவென்றால் அது நிச்சயம் ஜிகர்தண்டா தான். ஒரு ரவுடிக்கும், ஒரு இயக்குனருக்கும் இடையே நடக்கும் மோதலை மிகச் சரியாகக் காட்சிப்படுத்தி நம்மை அசர வைத்திருந்தார் கார்த்திக் சுப்புராஜ்.
ஜிகர்தண்டா திரைப்படத்தில் சினிமாவிலேயே சினிமாவைப் பற்றி கதை சொல்லி அதனை தனது விறுவிறுப்பான திரைக்கதை மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்ததால் முக்கியமான இயக்குனர் பட்டியலில் அவர் சேர்ந்தார். இந்த திரைப்படத்தில் அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடித்திருந்த பாபி சிம்ஹாவுக்கு, தேசிய விருது பட்டம் தேடி வந்தது.
முதலில் இந்த கதாபாத்திரத்திற்கு ராகவா லாரன்ஸைதான் கார்த்திக் சுப்புராஜ் அணுகி இருந்தார். ஆனால் அந்த நேரத்தில் அவரால் நடிக்க முடியாமல் போனதால், பாபி சிம்ஹா படத்திற்குள் வந்தார். இந்த நிலையில் தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை எடுத்து அடுத்த கட்டத்திற்கு சென்றிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.
ஹீரோவாக நடிக்க ஆசைப்படும் ரவுடி, அந்த ஹீரோவை கொன்றால்தான் தனக்கு போலீஸ் வேலை கிடைக்கும் என நிர்பந்திக்கப்பட்டதால் அவரிடம் இயக்குனராக அறிமுகமாகும் இளைஞர், சூட்டிங்கிற்காக இவர்கள் செல்லும் மலைக்காடு, அங்கு பழங்குடியின மக்களுக்கு இருக்கும் பிரச்சனை என பல்வேறு விஷயங்களை கார்த்திக் சுப்புராஜ் இதில் பகிர்ந்து இருப்பதால், ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அதுமட்டுமல்லாமல், கார்த்தியின் 25வது திரைப்படமான ஜப்பான் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருக்க, அதன் வசூலையும் இந்த திரைப்படம் முறியடித்திருக்கிறது. ஜப்பான் திரைப்படம் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஐந்தரை கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. அதேசமயம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் ஆறரை கோடி ரூபாய் வசூல் செய்து ஆச்சரியப்படுத்தியுள்ளது. அதுவும் இரண்டாவது நாளில் மட்டும் நான்கரை கோடி ரூபாயை அந்த படம் ஈட்டி இருக்கிறது. வரும் நாட்களிலும் இந்த திரைப்படத்தின் வசூல் எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.





