கூழாங்கல் பட இயக்குனர் வினோத் ராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் இன்று வெளியாகி உள்ள படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் சூரி நாயகனாகவும், அன்னாபென் நாயகியாகவும் நடித்துள்ளனர். பின்னணி இசை இல்லாமல், இசையமைப்பாளர் பங்களிப்பே இல்லாமல் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த படம் வழக்கமான கமர்ஷியல் படங்கள் போல இல்லாமல், வித்யாசமான கதைக்களத்தில் பயணிக்கிறது. விருதுக்குரிய ஒரு படைப்பு போல இந்த படம் உருவாக்கப்பட்டு இருப்பது, படத்தில் ஆரம்ப காட்சிகளிலேயே ரசிகர்களுக்கு புரிந்து விடுகிறது. வழக்கமான கதையாக இல்லாமல், யதார்த்த சினிமாவாகவும் உள்ளது.
இந்த படம் குறித்து ஆரம்பத்தில் இருந்தே பெரிய அளவில் பேசப்பட்டது. கூழாங்கல் படம் மிக வித்யாசமான யதார்த்த படைப்பாக இருந்ததால் அந்த படத்தை காட்டிலும் இந்த படம் வேற லெவலில் இருக்கும் என்றும் கூறப்பட்டது. வெளிநாடுகளில் நடந்த சர்வதேச திரைப்பட விழாக்களில் கொட்டுக்காளி படம் திரையிடப்பட்டு, பாராட்டுகளையும் பெற்றது.
ஆனால் சினிமாத்தனம் இல்லாத சினிமாவாக இதை உருவகப்படுத்தி இயக்கி இருந்தாலும், இந்த படம் ரசனைக்குரியதாக, ரசிகர்கள் விரும்பக் கூடியதாக இருந்தால் மட்டுமே வெற்றி பெற வாய்ப்பு ஏற்படும். வழக்கமான கமகம மசாலா பிரியாணிஇது இல்லை. ஆனால் உப்பு போடாத பழைய தயிர்சாதம் என்றாலும், கடித்துக்கொள்ள பச்சை மிளகாய், வெங்காயம் கூட இல்லாமல் சாப்பிடுவது மிகவும் சிரமம்தான் என்பதையும் படத்தின் டைரக்டர் வினோத் ராஜ் யோசித்திருக்க வேண்டும்.
கொட்டுக்காளி படம் குறித்து மூத்த சினிமா பத்திரிகையாளர், வலைப்பேச்சு அந்தணன் ஒரு நேர்காணலில் கூறியிருப்பதாவது, கொட்டுக்காளி ரொம்பவும் சுமாரான ஒரு படம்தான். படம் நன்றாக இருக்கிறது. ஒரு கிராமத்தில் நடப்பதை அப்படியே நன்றாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் இவர்கள் கொண்டாடியது போல படம் அந்தளவுக்கு இல்லை.
அவர்கள் கொட்டுக்காளி படம் குறித்து பேசியதை பார்த்தால், 10 ஆஸ்கர் விருது கிடைக்கும் என்பது போல பேசினார்கள். ஆனால் இதுபோன்ற படங்களை எல்லாம் எப்போதோ பாலுமகேந்திரா எடுத்து விட்டார். படப்பிடிப்பு நேரத்தில் அப்படியே கேமராவை வைத்துவிட்டு வீட்டுக்கு போய் விடுவார்கள் போல தெரிகிறது. கேமரா அப்படி இருக்கிறது. ஒருவர் நிற்கிறார். ஒருவர் மாடு மேய்க்கிறார். ஒருவர் எங்கேயோ நிற்கிறார். இது ஒரு படமா, ஒரு படம் என்பது கதையை நகர்த்த வேண்டும், என்று விளாசி தள்ளியிருக்கிறார் பத்திரிகையாளர் அந்தணன்.





