கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜப்பான். ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி ஆகிய படங்களை இயக்கி கவனம் ஈர்த்த ராஜுமுருகன் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பல மடங்கு இருந்தது. அதிலும் இந்தப் படம் கார்த்திக்கு 25ஆவது படம் என்பதும் இங்கு நினைவுகூரத்தக்கது.
சூழல் இப்படி இருக்க படமானது தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த பத்தாம் தேதி படம் வெளியானது. ஜப்பானுக்கு போட்டியாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், கிடா, ரெய்டு ஆகிய மூன்று படங்கள் ரிலீஸானாலும் எதிர்பார்ப்புக்குரிய படங்களின் லிஸ்ட்டில் ஜப்பான் படம்தான் முதல் இடத்தில் இருந்தது. அதனால் ரசிகர்களும் முதல் நாள் படம் பார்ப்பதற்கு தியேட்டருக்கு ஆர்வத்துடன் சென்றார்கள்.
ஆனால் ஜப்பான் படமோ ரசிகர்களை துளிக்கூட திருப்திப்படுத்தவில்லை. சமூக அக்கறை கொண்ட ராஜுமுருகனா இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் என்று பலரும் கேள்விகள் கேட்டனர். முதல் நாளின் முடிவிலேயே படத்தின் ரிசல்ட் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பது உறுதியானது. வசூலிலும் இதுவரை 20 கோடி ரூபாயை தொட முடியாமல் திணறிக்கொண்டிருக்கிறது ஜப்பான்.
மேலும் சில திரையரங்குகளில் ஜப்பான் படம் தூக்கப்பட்டு ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படம் திரையிடப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி அளித்த ஒரு பேட்டியில், “கார்த்தி நடிக்கும் ஜப்பான் படத்தை ராஜுமுருகன் இயக்குகிறார் என்ற அறிவிப்பு வெளியானதும் அதன் மீது எனக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. அதற்கு காரணம் ராஜுமுருகன்.
அவர் ஜோக்கர் என்ற சமூக அக்கறையுள்ள படத்தை இயக்கியிருக்கிறார். அதனால் கார்த்தியை வைத்தும் ஒரு சமூக அக்கறை கொண்ட படத்தை பேசுவார் என்று நினைத்தேன். ஆனால் அதன் பிறகு படத்திலிருந்து வந்த டீசர், ஃபர்ஸ் லுக் போஸ்டரை பார்த்துவிட்டு அந்தப் படத்தின் மீதான நம்பிக்கை எனக்கு சுத்தமாக போய்விட்டது. அதுவும் நகைக்கடையில் கொள்ளை அடிக்கும் நபராக கார்த்தி நடித்திருக்கிறார் என்ற தகவல்கள் வர வர அந்தப் படம் ஓடவே ஓடாது என்று முடிவெடுத்துவிட்டேன்” என்றார்.
முன்னதாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கார்த்தி, நான் இதுவரை எந்த இயக்குநரிடமும் வாய்ப்பு கேட்டதில்லை. ஆனால் ராஜுமுருகனிடம் மட்டும்தான் எனக்கு ஒரு கதை செய்யுங்கள் என்று சொல்லி வாய்ப்பு கேட்டேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.





