நடிகை ஜோதிகா தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு நட்சத்திரமாக இருந்து வருகிறார். குறிப்பாக 1990களில் அவர் நடித்த படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. எந்த கேரக்டராக இருந்தாலும் அதை மிக சிறப்பாக அழுத்தமாக செய்யும் திறமையான நடிகையாக அவர் தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார்.
உதாரணமாக சந்திரமுகி படத்தில் ரஜினி நாயகனாக இருந்தாலும் கிளைமாக்ஸில் படத்தை தனது ஆளுமைக்குள் கொண்டு வந்தவர் ஜோதிகா என்றால் அது மிகையல்ல. மணிசித்ரதாழ் என்ற மலையாள படத்தின் ரீ மேக்தான் சந்திரமுகி. அந்த படத்தில் மோகன்லால் நடித்த கேரக்டரில் ரஜினிகாந்த் தமிழில் நடித்திருந்தார்.
அதே போல் சுரேஷ் கோபி கேரக்டரில் பிரபுவும், ஷோபனா கேரக்டரில் ஜோதிகாவும் தமிழில் சந்திரமுகி படத்தில் நடித்திருந்தனர். ஆனால் மலையாளத்தில் ஷோபனா நடித்ததை காட்டிலும் பலமடங்கு தமிழில் ஜோதிகாவின் நடிப்பு அழுத்தமாகவும், மிரட்டலாகவும் இருந்தது என்பது ரசிகர்களே ஏற்றுக்கொண்ட உண்மையாகும்.
கமல் விஜய் அஜீத்குமார் மாதவன் விக்ரம் என முன்னணி நடிகர்களின் படங்களில் நாயகியாக நடித்த ஜோதிகா பல வெற்றிப் படங்களில் நடித்தவர். குறிப்பாக குஷி டும்டும்டும் காக்க காக்க வேட்டையாடு விளையாடு தெனாலி வாலி முகவரி சில்லுன்னு ஒரு காதல் பேரழகன் தூள் போன்ற பல படங்களில் ஜோதிகா நடிப்பு ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துக்கொண்ட நிலையில் சூர்யா ஜோதிகா தம்பதிக்கு மகன், மகள் உள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன் மும்பையில் குடியேறிய நிலையிலும் தமிழ் மற்றும் மலையாள படங்களில் ஜோதிகா மீண்டும் நடித்து வருகிறார். மலையாளத்தில் காதல் தி கோர் என்ற படத்தில் மம்முட்டியுடன் ஜோதிகா நடித்திருந்தார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ஜோதிகா கூறியதாவது, காதலை மையப்படுத்திய படங்கள் ஹீரோக்களுடன் டூயட் பாடும் படங்களில் நடிப்பதை நான் 27 வயதிலேயே நிறுத்தி விட்டேன். இப்போது எனக்கு 45 வயதாகிறது. ஹீரோக்களை சுற்றிக்கொண்டு ஓடுவது, அவர்களுடன் மரத்தை சுற்றிக்கொண்டு டூயட் பாடுவது காதலை மையப்படுத்திய படங்களே எனக்கு பிடிக்காமல் போய்விட்டது என்று ஜோதிகா கூறியிருக்கிறார்.





