நடிகர் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்த படம் அபூர்வ சகோதரர்கள். சிங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய இந்த படம், 35 ஆண்டுகளுக்கு முன் 1989ம் ஆண்டில் வெளிவந்தது. கெளதமி, ரூபிணி, ஸ்ரீவித்யா, மனோரமா, ஜெய்சங்கர், நாகேஷ், நாசர், டெல்லி கணேஷ், மௌலி, ஜனகராஜ் உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவான இந்த படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல்களை கவிஞர் வாலி எழுதியிருந்தார். எல்லா பாடல்களுமே சூப்பர் ஹிட். படமும் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது, படத்தின் கதை வசனம், கிரேஸி மோகன் எழுதியிருந்தார். பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
பல தியேட்டர்களில் 200 நாட்களை கடந்து ஓடிய இந்த படத்துக்கு பிலிம்பேர் சிறந்த திரைப்படம் விருது கிடைத்தது. தமிழக அரசின் சிறந்த நடிகர் விருது கமலுக்கும், சிறந்த கவிஞர் விருது வாலிக்கும் இந்த படத்துக்காக கிடைத்தது. கமல்ஹாசனின் சினிமா வரலாற்றில் அபூர்வ சகோதரர்கள் ஒரு மைல் கல் என்று சொல்லலாம். இப்போது அந்த படம், ரசிகர்களால் விரும்பி ரசித்து பார்க்கப்படுகிறது.
நேர்மையான போலீஸ் அதிகாரி சேதுபதியை, ஊர் பெரியவர்களாக இருக்கும் 4 வில்லன்கள் கொன்று விடுகின்றனர். அப்போது கர்ப்பிணியாக இருக்கும் சேதுபதி மனைவிக்கு விஷமும் கொடுத்து விடுகின்றனர். ஆனால் அவர் பிழைத்து விடுகிறார். இதில் கார் மெக்கானிக் ராஜா கமல், சர்க்கஸ் கோமாளி கமல் என கேரக்டர்களில் நடித்திருந்தார்.
இதில் சர்க்கஸ் கோமாளியாக வரும் கமல் 3 அடி உயரமே இருப்பார். அவர்தான், ஒரு கட்டத்தில் தன் தந்தையை கொன்ற 4 வில்லன்களையும் பழிவாங்குவார். ஆனால் ஒவ்வொரு முறையும் அவரது சகோதரர் கமல் வந்து இதில் தானாக மாட்டிக்கொள்வார். அவருக்கு காதலியாக கௌதமி நடித்திருந்தார். கொலையாளியை பிடிக்கும் இன்ஸ்பெக்டர் கேரக்டரில் ஜனகராஜ் நடித்திருந்தார்.
இதில் 35 ஆண்டுகளாகியும் திரைவிலகாத மர்மம் 3 அடி உயரத்தில் கமல் எப்படி நடித்தார் என்பதுதான். காலை மடக்கி நடித்தார், மண்டியிட்டு நடித்தார், பள்ளம் தோண்டி அதில் இறங்கி நடித்தார் என்றாலும், இன்னும் அதில் முழுமையான உண்மை வெளிவரவில்லை, இந்நிலையில் மும்பையில் இந்தியன் 2 பிரமோவில் பங்கேற்ற கமலிடம் இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்ட போது, இன்னும் ஒன்றரை மாதத்தில் அப்புவாக நடித்த ரகசிய உண்மைகளை வெளியிடுகிறேன் என்று உறுதியாக கூறியிருக்கிறார் கமல்ஹாசன்.





