மேற்குத் தொடர்ச்சி மலை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் விஜய் சேதுபதி. இங்கிருந்து, பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், நானும் ரவுடிதான், தர்மதுரை, விக்ரம் வேதா, சேதுபதி என ஏராளமான வெற்றி திரைப்படங்களை அவர் கொடுத்தார்.
இதன் மூலம் அவர் தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் பட்டியலில் சேர்ந்தார். ஹீரோ மட்டுமல்லாமல், வில்லன் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வந்தார். குறிப்பாக பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லனாகவும், மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாகவும் வந்தார் விஜய் சேதுபதி.
விக்ரம் திரைப்படத்திலும், சந்தானம் கதாபாத்திரத்தில் நடித்து நம்மை மிரட்டி இருப்பார் விஜய் சேதுபதி. ஆனால் தொடர்ந்து இது போன்ற கதாபாத்திரங்களே அவருக்கு வருவதால், இனி ஹீரோவை தவிர பிற கதாபாத்திரங்களில் நடிக்கப் போவதில்லை என்று அறிவித்தார் விஜய் சேதுபதி. இப்படியான சூழலில் தான் அவருக்கு மகாராஜா திரைப்படம் வெளியானது.
குரங்கு பொம்மை என்னும் திரைப்படத்தை எடுத்து விமர்சன ரீதியாக வெற்றி பெற்ற இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன் தான் இந்த படத்தை எடுத்தார். விஜய் சேதுதியின் ஐம்பதாவது திரைப்படமாக உருவான இது, மிகப்பெரிய அளவில் வெற்றியை ருசித்தது. படத்தில் நடித்திருந்த அத்தனை கதாபாத்திரங்களும் தங்களது ரோலை உணர்ந்து மிக இயல்பாக நடித்து அசத்தினர்.
குறிப்பாக மற்ற திரைப்படங்களில் காமெடி காட்சிகளில் நம்மை சிரிக்க வைத்த சிங்கம் புலி, இதில் கொடூரம் கலந்த வில்லனாக நடித்து காண்போரை பயமுறுத்தினார். சாதாரண கதை தான் என்றாலும் அதை நான் லீனியர் முறையில் கூறி கைத்தட்டல்களைப் பெற்றார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
இந்தத் திரைப்படம், ஓடிடி தளத்தில் கடந்த ஜூலை பன்னிரண்டாம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து தெலுங்கு கன்னடா மற்றும் ஹிந்தி திரையுலகிலும் இந்த திரைப்படம் ரீச் ஆனது. பலரும் மகாராஜா மிக நன்றாக இருப்பதாக பாராட்டினர். இந்த நிலையில் நடப்பாண்டு ஓடிடி தளத்திலேயே அதிக முறை பார்க்கப்பட்ட திரைப்படம் என்ற பெருமையை மகாராஜா பெற்றிருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பட குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.





