விக்ரம் திரைப்படத்திற்கு பிறகு கமல்ஹாசன், இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்தார். சங்கர் கமல்ஹாசன் கூட்டணியில் இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக உருவானது. கொரோனா உள்ளிட்ட பிரச்சினைகளே இதற்கு காரணம். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்தத் திரைப்படம் படுதோல்வியை சந்தித்தது.
அதுமட்டுமல்லாமல் இணையத்திலும் இந்த திரைப்படத்தை பலர் கிண்டல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தெலுங்கில் பிரம்மாண்ட முறையில் எடுக்கப்பட்ட கல்கி படத்திலும் கமல்ஹாசன் இடம்பெற்றார். பிரபாஸ், அமிதாப்பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம், ஓரளவு வரவேற்பை பெற்றது.
இந்த இரண்டு திரைப்படங்களை தொடர்ந்து தற்போது தக் லைப் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் கமல்ஹாசன். ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மணி ரத்னம் இந்த திரைப்படத்தை இயக்கியிருக்கிறார். இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே வெளியான நாயகன் திரைப்படம், இப்போது வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
1987 ஆம் ஆண்டு நாயகன் வெளியாகி இருந்தது. இதனையடுத்து கிட்டத்தட்ட 35 ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இந்த ஜோடி கைகோர்த்துள்ளது. இதில் சிலம்பரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். திரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோரும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளார்கள்.
ஏ ஆர் ரகுமான் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். கேங்ஸ்டர் பாணியில் இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி, ஜெய்சல்மார் உள்ளிட்ட இந்திய நகரங்களிலும், வெளிநாடுகளிலும் இதன் படப்பிடிப்பு எடுக்கப்பட்டது. அண்மையில் கமலஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு படத்தில் இருந்து ஒரு சிறிய வீடியோ வெளியானது.
அதில் தக் லைப் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அடுத்த படத்திற்காக கமலஹாசன் தயாராகி வருகிறார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர், சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவை சந்தித்துள்ளார். இவர்கள்தான் படத்தை இயக்க உள்ளார்கள். இது குறித்து அவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க ஆக்சன் கலந்த திரைப்படமாக இது உருவாகிறது.





