நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 14ம் தேதி வெளியான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான இந்த படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார். தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன், யுவி கிரியேசன்ஸ் நிறுவனங்கள் இந்த படத்தை ரூ. 300 கோடி பட்ஜெட்டில் தயாரித்துள்ளன.
படம் வெளியான முதல் நாள், முதல் காட்சியிலேயே படத்துக்கு எதிரான கடுமையான விமர்சனங்கள் வரத் துவங்கின. குறிப்பாக படத்தில் இரைச்சல், கூச்சல் அதிகமாக உள்ளது. கதை, திரைக்கதை இல்லை. இசை மிகவும் மோசமாக உள்ளது. தலைவலி மாத்திரை, காப்பியுடன் படம் பார்க்க செல்ல வேண்டும். காதுகளில் அடைத்துக்கொள்ள பஞ்சு வேண்டும் என்றெல்லாம் படம் பார்த்த பலரும் கூறினர்.
கங்குவா படம் குறித்து எதிர்மறையான விமர்சனங்கள் இணையத்தில் அதிகரித்திருந்த நிலையில், திடீரென நயன்தாரா, நடிகர் தனுஷ் குறித்து கடுமையாக விமர்சித்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அது இணையத்தில் தீயாக வைரலானது. இதனால் கங்குவா படம் குறித்த விமர்சனம் பின்தங்கி திடீரென காணாமல் போனது.
அந்த நேரத்தில், அப்பாடா எப்படியோ தப்பிச்சோம், இனி கங்குவா பத்தி யாரும் பேச மாட்டாங்க என சிறுத்தை சிவா அண்ட் டீம் நிம்மதி பெருமூச்சு விட்ட நேரத்தில் திடீரென களத்தில் குதித்தார் நடிகை மற்றும் சூர்யாவின் மனைவி ஜோதிகா. கங்குவா படம் குறித்து விமர்சிப்பவர்களை தாறுமாறாக அவரும் விமர்சித்து பதிவு வெளியிட்டார்.
இதனால் மீண்டும் கங்குவா விமர்சனம் சூடுபிடித்தது. ஜோதிகா கருத்துகளுக்கு எதிரான விமர்சனங்களும் பரவ ஆரம்பித்தது. நயன்தாரா, தனுஷ் விவகாரம் பின்னுக்கு போய் மீண்டும் கங்குவா படம் சார்ந்த விமர்சனங்கள் அதிகரிக்க ஆரம்பித்தன. ஜோதிகா அமைதியாக இருந்திருந்தால் கங்குவா படம் பற்றி மக்களே மறந்து போயிருப்பார்கள் என்று சூர்யா ரசிகர்கள் புலம்புகின்றனர்.
தமிழ் சினிமாவில் ஜோதிகாவை ஒரு முன்னணி நடிகையாக உயர வைத்தது ரசிகர்கள்தான். ஜெய்பீம், சிங்கம், சூரரைப் போற்று, காக்க காக்க, கஜினி, அயன் போன்ற சூர்யாவின் பல படங்களை வெற்றி பெற வைத்ததும் இந்த ரசிகர்கள்தான். படம் நன்றாக இல்லை என்றால் விமர்சிக்கவே செய்வார்கள். இந்த அடிப்படை புரிதல் கூட இல்லாமல், ஜோதிகா ஆவேசப்படுவது அர்த்தமே இல்லாதது என சூர்யா ரசிகர்களே கூறுகின்றனர்.





