இதுவரை வெறும் இரண்டே இரண்டு திரைப்படங்களை இயக்கி அதன் மூலம் தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை சேர்த்திருப்பவர் இயக்குனர் நலன் குமாரசாமி. நாளைய இயக்குனர் என்னும் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமான அவர், சுவாரஸ்யமான குறும்படங்களை இயக்கி பலரது கவனத்தையும் ஈர்த்தார்.
இவரது முதல் திரைப்படம் ஆக சூது கவ்வும் வெளிவந்தது. விஜய் சேதுபதி அப்போது வளர்ந்து கொண்டு இருந்த தருணம். ஒரு சிறிய கூட்டணியை வைத்து மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. காட்சிக்கு காட்சி சுவாரஸ்யத்தையும், திருப்புமுனையையும் கொடுத்து அசர வைத்திருந்தார் இயக்குனர் நலன் குமாரசாமி.
இப்படி முதல் திரைப்படமே அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுக்க அவரது அடுத்த திரைப்படம் குறித்து பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இப்படியான சூழலில் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு அவர் ஒரு கொரியன் திரைப்படத்தை ரீமேக் செய்தார். அதுதான் காதலும் கடந்து போகும்.
விஜய் சேதுபதி மற்றும் மடோனா செபஸ்டின் இருவரும் இணைந்து நடித்த இந்த திரைப்படம், காதலை மையப்படுத்தி ஆனால் அதுதான் காதல் என்று சொல்லாமல் எழுதப்பட்டிருந்தது. ஒரு காதல் திரைப்படத்தை இப்படியும் எடுக்கலாம் என்று அதன் மூலம் காட்டியிருந்தார் நலன் குமாரசாமி.
ஒரு கட்டத்தில் கதாநாயகன் கதாநாயகி இருவரும் சந்திக்கும்போது தான் அவர்களுக்குள் காதல் துளிரும். அந்த இடத்தின் தான் படத்தின் டைட்டிலேயே போட்டு, முடித்து இருப்பார் இயக்குனர் நலன் குமாரசாமி. இப்படி இந்த இரண்டு திரைப்படங்கள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்த அவர், தற்போது கார்த்தியை வைத்து வா வாத்தியார் என்னும் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ், கீர்த்தி செட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். எம்ஜிஆர் ரசிகர்களை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதன் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில், கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடனமாடுகிறார். ராஜ்கிரன் சத்யராஜ் கீர்த்தி செட்டி ஆகியோர் ஒரு காட்சிக்கு வந்து போகிறார்கள். அனேகமாக அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்த திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகிறது.





