இயக்குனர் பாலா இயக்கிய நந்தா படத்தில் லொடுக்கு பாண்டி கேரக்டரில் அறிமுகமானவர் கருணாஸ். மேடைகளில் கானா பாடல்களை பாடிக்கொண்டிருந்த கருணாஸை லொடுக்கு பாண்டி என்ற காமெடி கேரக்டரில் நடிக்க வைத்திருந்தார் இயக்குனர் பாலா. முதல் படமே மிகப்பெரிய அடையாளத்தை வரவேற்பை கருணாஸ்க்கு அந்த படம் பெற்றுத் தந்தது.
தொடர்ந்து பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்த கருணாஸ் பெரிய அளவில் ரசிகர்களிடம் ரீச் ஆனார். ரஜினியுடன் பாபா, கமலுடன் வசூல்ராஜா எம்பிபிஎஸ் மற்றும் விஜய் அஜீத்குமார் சூர்யா தனுஷ் ஜெயம் ரவி என பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடி செய்து ரசிகர்களிடம் முக்கிய இடம் பிடித்தார்.
இதற்கிடையே திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி போன்ற படங்களில் கதையின் நாயகனாகவும் கருணாஸ் நடித்தார். இந்த படங்களும் நல்ல வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. பிறகு முக்குலத்தோர் புலிப்படை என்ற அரசியல் இயக்கம் துவங்கி அதன் தலைவராக இருக்கிறார். அதிமுக ஆட்சி காலத்தில் எம்எல்ஏவாகவும் கருணாஸ் இருந்தார்.
இப்போது திமுக ஆதரவாளராக கருணாஸ் பேசி வருகிறார். குறிப்பாக சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் குறித்து பேசிய கருணாஸ் பாசிசம் பாயாசம் குறித்து ஒரு பாதரசம் பேசுகிறது என்றும் நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்து இருந்தார். கருணாஸ் மகன் கென்னியும் திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் கருணாஸ் கூறியதாவது, கடந்த 2010ம் ஆண்டில் நான் நடித்த திண்டுக்கல் சாரதி படத்தில் எனக்கு ஜோடியாக சிம்ரன் நடிப்பதாக இருந்தது. சிம்ரனை யாராவது வேண்டாம் என்று சொல்வார்களா? அதுவும் என்னை மாதிரி இருக்கிற ஒருத்தன் சொல்ல முடியுமா?
சிம்ரன் நடித்தால் படத்துக்கு பெரிய கிளாமர் கிடைக்கும். டைரக்டர் எஸ்ஜே சூர்யா ஹீரோவா நடிக்கும் போது நியூ படத்தில் தனக்கு ஹீரோயினா சிம்ரனை தான் நடிக்க வைத்தார். தயாரிப்பு நிறுவனத்தில் சிம்ரன் ஜோடி என்றவுடன் நான்தான் சார், அது சரியா வராது சார் என்று மறுத்து விட்டேன். என்னை விட கொஞ்சம் நல்லா சிவப்பா அழகா இருக்கிற பொண்ணு அது போதும் சார் என்றேன். கதைப்படி கதாநாயகி ஓடிப்போயிடுவாங்கறதுதான் என் பிரச்னை. சிம்ரன் என்றால் 100 சதவீதம் ஓடிவிடுவார் என்று ரசிகர்களே நினைப்பார்கள். அதனால் சிம்ரனை வேண்டாம் என்று மறுத்ததாக நடிகர் கருணாஸ் கூறியிருக்கிறார்.





