தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் என்ற படத்தில் நடிகர் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான அவர், தொடர்ந்து முன்னனி ஹீரோக்களுடன் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அவரது அழகும், வசீகரமும் சிறந்த நடிப்பும் தமிழ் சினிமா ரிசகர்களுக்கு மிகவும் பிடித்துப் போனது.
விஜய், தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன், துல்கர் சல்மான், விஷால், சூர்யா, உதயநிதி ஸ்டாலின் போன்ற முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்ததால் கீர்த்தி சுரேஷ் பெரிய அளவில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக மாறினார். பைரவா, சர்க்கார், சாமி 2, ரஜினி முருகன், ரெமொ, நடிகையர் திலகம், மாமன்னன், சண்டக்கோழி 2, தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களில் அவரது நடிப்பு வரவேற்பை பெற்றது.
அதிலும் குறிப்பாக நடிகையர் திலகம் என்ற படத்தில் மறைந்த நடிகை சாவித்திரி கேரக்டரில் கீர்த்தி சுரேஷின் அழுத்தமான, மிக அற்புதமான நடிப்பு அவருக்கு சிறந்த நடிகை தேசிய விருதை பெற்றுத் தந்ததும் குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் வெளியான அவரது ரகுதாதா படமும் நல்ல கவனத்தை பெற்றது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த அதிகாரபூர்வமான தகவல் சில தினங்களுக்கு முன் வெளியானது. அவரது நீண்ட கால நண்பர், அதாவது 15 ஆண்டுகளாக பழகி வரும் காதலர் ஆண்டனி என்பவரை கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துக்கொள்கிறார். கோவாவில் அவர்களது திருமணம் கோலாகலமாக நடைபெற உள்ளது.
வருகிற 12ம் தேதி, கோவாவில் நடைபெற உள்ள திருமணத்தில் தனது 15 ஆண்டு கால காதலர் ஆண்டனியை, கீர்த்தி சுரேஷ் பெற்றோர் சம்மதத்துடன் கரம் பிடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு தொடர்ந்து நடிப்பாரா என்பது தெரியவில்லை. ஆனால் அவர் நடிப்பாற்றல் மிக்க நடிகையாக இருப்பதால் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் விரும்புகின்றனர்.
இதற்கிடையே நடிகர் ரஜினிகாந்துக்கு தங்கையாக, அண்ணாத்த என்ற படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். 3 ஆண்டுகளுக்கு முன் வெளியான அந்த படம் ஓரளவுக்கு வெற்றி படமாக இருந்தது. ரஜினிகாந்துக்கு தங்கையாக நடித்த சென்டிமென்ட் காரணமாக, ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12ம் தேதி அவருக்கு திருமணம் நடைபெற உள்ளதாக, ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கூறி கமெண்ட் செய்து வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.





