தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் மிக முக்கிய பங்கு வகிப்பவர் பாலா. திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களை தனது திரைக்கதையின் வாயிலாக நெகிழ வைத்து விடுவார் இந்த ஜாம்பவான். இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவியாளராக இருந்த இவர், இயக்குனராக அறிமுகமானது சேது திரைப்படத்தில்தான்.
அதற்கு முன்பு பல்வேறு திரைப்படங்களில் விக்ரம் நடித்து வந்தாலும் சேது தான் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. இன்று மிக முக்கிய நட்சத்திரமாக விக்ரம் மாறியதற்கு அன்று வெளியான சேது திரைப்படம்தான் காரணம். யாருமே எதிர்பார்க்காத வகையில் ஒரு கிளைமாக்ஸ் காட்சியை கொடுத்து, ரசிகர்களை கண்கலங்க செய்தார் இயக்குனர் பாலா.
அது மட்டுமல்ல விக்ரம் அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கு ஏணி படியாகவும் இருந்தார். இதன் பிறகு, நடிகர் சூர்யாவை வைத்து பாலா எடுத்த திரைப்படம் நந்தா. சூர்யாவின் ஆரம்பகட்ட காலத்தில் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்ல இந்த திரைப்படம் பேருதவியாக இருந்தது. எதார்த்தமான கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், வெற்றி மேல் வெற்றி குவித்தது.
இதனைத் தொடர்ந்து பாலாவின் திரையுலக பயணத்திலேயே ஆகச்சிறந்த திரைப்படமாக அமைந்தது பிதாமகன். இந்த முறை விக்ரம் மற்றும் சூர்யா என இருவரையும் வைத்து இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் பாலா. ஒரு பக்கம் கலகல சுபாவம் கொண்ட சூர்யா, மறுபக்கம் எந்த ஒரு டயலாக்குமே பேசாத வெட்டியான் கதாபாத்திரத்தில் விக்ரம் என பிதாமகன் திரைப்படம் அனைத்து விதங்களிலும் கச்சிதமாக அமைந்தது.
இந்தத் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியும் ரசிகர்களின் நெஞ்சை உலுக்கி எடுக்க, பலரும் சித்தன் கதாபாத்திரத்தில் வாழ்ந்த விக்ரமை கண்டு நெகிழ்ந்து போனார்கள். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதையும் பெற்றார் விக்ரம். இப்படியான சூழலில் அந்த திரைப்படம் குறித்த சில தகவல்களை கன்னட நடிகர் கிச்சா சுதீப் பேசியிருக்கிறார்.
பிதாமகன் திரைப்படத்தில் முதலில் நான்தான் நடிப்பதாக இருந்தது. விக்ரம் நடித்திருந்த சித்தா கதாபாத்திரத்தில் என்னை நடிக்க கூறியிருந்தார் இயக்குனர் பாலா. அந்த சமயத்தில் எனக்கு தமிழ் மொழி பெரிய அளவில் தெரியாது. இதனால் வேண்டாம் என்று கூறினேன். ஆனால் எனக்கு வசனமே கிடையாது என்று தெரிவித்தார். இதையடுத்து நான் ஒப்புக் கொண்டாலும் பல்வேறு காரணங்களால் நடிக்க முடியாமல் போனது என்று தெரிவித்துள்ளார்.





