விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் நகைச்சுவை கலைஞனாய் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டவர் பாலா. அன்று முதல் கேபிஒய் (கலக்கப் போவது யாரு) பாலா என்று மக்களால் அறியப்படுகிறவராக இருக்கிறார்.
தொடர்ந்து சினிமாவிலும் சில சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சினிமா நட்சத்திரங்கள், சின்னத்திரை நட்சத்திரங்கள் கலந்துக்கொள்ளும் கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்று காமெடி செய்கிறார். ஒரு வளர்ந்து வரும் நடிகராக தன்னை உருவாக்கிக்கொண்டு வருகிறார்.
பிறருக்கு உதவுவதில் ஆர்வம் கொண்ட கேபிஒய் பாலா, இதுவரை 5 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கி, போக்குவரத்து வசதியற்ற மக்களுக்கு, ஆபத்தான நேரங்களில் இலவசமாக உதவ, கொடுத்திருக்கிறார். சத்தியமங்கலம் பகுதி மலைவாழ் கிராம மக்கள் பயனடைந்து வருகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதத்தில் சென்னையில் மழைவெள்ளம் பாதித்த போது தன்னிடம் இருந்த பணம், வங்கி கணக்கில் இருந்த பணம், சீட்டுப்பணம் என மொத்தம் ரூ. 5 லட்சம் வரை, பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொடுத்து உதவியிருக்கிறார். தலா ரூ. 1000 வீதம் 340 குடும்பங்களுக்கும் மீதி பணத்தில் லுங்கி, நைட்டீ, பெட்ஷீட், ரொட்டி, பால், வாட்டர் பாட்டில் என பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.
சமீபத்தில் சென்னையில் ஒரு ஏரியாவில் போதிய பஸ் வசதி இல்லை என்பதால், கர்ப்பிணி பெண்கள், நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் இலவசமாக பயணிக்க ஆட்டோ வாங்கி ஓட விட்டிருக்கிறார். இன்னும் வருமானம் வரும்போது இதே போல் இன்னும் சில ஆட்டோக்களை இதே போல் வாங்கி மக்கள் பயன்பாட்டுக்கு விடுவதாகவும் கூறியிருக்கிறார்.
https://www.instagram.com/reel/C35bBFmxWuU/?utm_source=ig_web_copy_link
இப்போது எம்சிஏ படித்த மாற்றுத்திறனாளி ஒருவர், வேலைக்கு செல்ல தன்னிடம் வாகன வசதி இல்லை என்று கூறியதை அடுத்து, தனது சொந்த செலவில் அவருக்கு மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்கூட்டர் வாகனம் வாங்கி கொடுத்திருக்கிறார் கேபிஒய் பாலா. அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். கோடிகளில் புரளும் ஸ்டார் நடிகர்கள் கேபிஒய் பாலா போன்றவர்களை பார்த்தாவது, ஏழை எளிய மக்களுக்கு உதவி முன்வர வேண்டும்.





