ஜெயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ரவி. முதல் படமே பெரிய வெற்றியை கொடுத்ததால் ஜெயம் ரவி என அழைக்கப்பட்டார். இவரது காதல் மனைவி ஆர்த்தி. சினிமா தயாரிப்பாளர் சுஜாதா விஜயகுமாரின் மகள். ரவியும் ஆர்த்தியும் கல்லூரியில் படித்த போதே காதலர்கள் என்ற நிலையில் கடந்த 2010ம் ஆண்டில் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.
ஜெயம் ரவி ஆர்த்தி தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகனுக்கு 14 வயதும் இளைய மகனுக்கு 11 வயதும் ஆகிறது. இந்த சூழலில் கடந்தாண்டில் நடிகர் ஜெயம் ரவி திடீரென தனது மனைவி ஆர்த்தியை பிரிவதாக அறிவித்தார். சென்னையில் உள்ள முதன்மை குடும்ப நல நீதிமன்றத்திலும் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்தார்.
தனது கணவர் ஜெயம் ரவி எடுத்தது தன்னிச்சையான முடிவு; இதில் எனக்கு உடன்பாடு இல்லை. கடந்த பல மாதங்களாக அவர் என்னையும் என் பிள்ளைகளையும் புறக்கணித்து அலட்சியப்படுத்துகிறார் என்றும் ஆர்த்தி கூறியிருந்தார். அதே போல் நடிகர் ஜெயம் ரவியும் தன் மனைவி ஆர்த்தி மற்றும் குடும்பத்தினர் தன்னை மதிப்பதில்லை, வீட்டில் வேலைக்காரர்கள் முன் அவமதிக்கின்றனர் என்று கூறியிருந்தார்.
இதற்கிடையே பாடகி மற்றும் ஹீலர் கெனிஷா பிரான்சிஸ் என்பவருடன் ஜெயம் ரவி நெருக்கமான நட்பு கொண்டிருக்கிறார் என்ற தகவல் இணையத்தில் பரவியது. நாங்கள் இருவரும் நண்பர்கள்தான். அவர் ஒரு ஹீலர் சிகிச்சை மையம் ஆரம்பிக்க உள்ளார். அதில் இருவரும் சேர்ந்து பயணிக்க உள்ளோம். நல்ல நண்பர்களாக நாங்கள் இருக்கிறோம் என்று ஜெயம் ரவி கூறியிருந்தார்.
இதற்கிடையே தனது ஜெயம் ரவி என்கிற பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்ட அவர், நேற்று முன்தினம் நடந்த சினிமா தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இல்ல திருமண விழாவில் பங்கேற்றார். அப்போது பாடகி கெனிஷாவும் ரவி மோகனும் ஒரே மாதிரியான நிறத்தில் பட்டாடை அணிந்து தம்பதி போல நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டர். ஒரே சோபாவில் இருவரும் அருகருகே தம்பதி போல அமர்ந்திருந்தனர். அவரது கையை பற்றியபடியே ரவி மோகன் நடந்து சென்றார்.
இந்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வைரலான நிலையில் ரவி மோகனின் மனைவி ஆர்த்தி, ஒரு அறிக்கையை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். அதில் ரவி மோகன் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த பதிவை அப்படியே தங்களது வலைதள பக்கத்தில் நடிகை குஷ்பு, நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோர் வெளியிட்டு ஆர்த்திக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2 பிள்ளைகளின் அம்மாவாக, ஒரு கணவன் மீது அன்பு கொண்ட மனைவியாக ஆர்த்தியின் பதிவுக்கு அவர்கள் ஆதரவுக்கரம் நீட்டியுள்ளனர்.





