நடிகர் விஷ்ணு விஷால் வெண்ணிலா கபடிக்குழு படம் மூலம், தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர். பண்ணையில் கொத்தடிமை வேலை செய்யும் ஒரு கேரக்டரில் அந்த படத்தில் நடித்திருப்பார். பின் கபடி விளையாட்டில் சிறந்து வீரர் என நிரூபிப்பார். சுரேந்திரன் இயக்கிய இந்த படத்தில்தான், 50 பரோட்டா சாப்பிடும் சவால் காட்சி மூலம் நடிகர் சூரி பிரபலமானார்.
வெண்ணிலா கபடிக்கழு மிகப்பெரிய வெற்றிப்படமானதை அடுத்து ராட்சசன், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் உள்ளிட்ட படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்ற அடையாளத்தை பெற்றிருக்கிறார். இவரது நடிப்பில் கட்டாகுஸ்தி படமும் வெற்றி பெற்றது.
விஷ்ணு விஷால் மிக இயல்பான நடிகர் என்பதால், அவரால் கேரக்டருக்கு ஏற்றபடி தனது நடிப்பை நல்ல முறையில் வெளிப்படுத்த முடிகிறது. குறிப்பாக குள்ளநரிக்கூட்டம் படத்தில் அவரது வேலையில்லாத பட்டதாரி நடிப்பு மிக அருமையாக இருந்தது. அதே போல் அந்த படத்தில் கதையும் விஷ்ணு விஷாலுக்கு பக்கபலமாக அமைந்தது.
குறிப்பாக இன்று நேற்று நாளை, முண்டாசுப்பட்டி, ராட்சசன், குள்ளநரிக்கூட்டம் என அவரது வெற்றிப்படங்கள் அனைத்துமே, கதையம்சம் நிறைந்த மிக நல்ல படங்களாக இருந்தன. அதனால் அவருக்கும் வெற்றி நாயகன் என்ற பெயர் கிடைக்க கதையும், திரைக்கதையும், படத்தின் இயக்குநர்களும் காரணமாக இருந்தனர் என்றால் அதுதான் உண்மை.
ரஜினிகாந்த் மூத்த மகள் ஐஸ்வர்யா டைரக்ஷனில் சமீபத்தில் வெளியான லால் சலாம் படத்தில் கேமியோ ரோலில், 45 நிமிடங்களுக்கு மேல் வரும் வகையில் ரஜினி நடித்திருந்தார். இரட்டை ஹீரோக்களாக விஷ்ணு விஷால், விக்ராந்த் நடித்திருந்தனர். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், ரஜினி படம் என்பதால் ஓரளவு வசூல் செய்து வருகிறது.
இதையடுத்து விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த மோகன்தாஸ் படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இப்போது ஆர்யன் என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதற்கிடையே விஷ்ணு விஷால் தனது சம்பளத்தை ரூ. 8 கோடியாக உயர்த்தியிருக்கிறார். லால் சலாம் வெற்றியை தொடர்ந்து தனது சம்பளத்தை பல கோடிகள் அவர் உயர்த்தியதாக கூறப்படுகிறது. அதனால் சினிமா ரசிகர்கள் பலரும், லால் சலாம் படத்தில் ரஜினிதான் மெயின் ஹீரோ, நீங்களும் விக்ராந்தும் சைடு ஹீரோக்கள்தான், என கலாய்த்து வருகின்றனர்.





