சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலான விஷயம், லால் சலாம் படத்தில் நாயகியாக தன்யா பாலகிருஷ்ணன் நடிக்கிறார் என்பதுதான். ஏனெனில், இவர் பல ஆண்டுகளுக்கு முன், தமிழர்கள் குறித்து மிக இழிவான வார்த்தைகளை பேசியிருந்தார். அதுவும், தமிழர்கள் தண்ணீருக்காக பிச்சை கேட்பதாகவும் கூறியிருந்தார்.
இதற்கு தமிழக மக்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பு கிளம்பியது. தன்யா பாலகிருஷ்ணன் ஏற்கனவே ஏழாம் அறிவு, காதலில் சொதப்புவது எப்படி போன்ற சில தமிழ் படங்களில் நடித்திருந்த நிலையில், இனிமேல் தமிழ் படங்களிலும் நடிக்க மாட்டேன் எனவும் சவால் விட்டிருந்தார்.
இப்படி தமிழக மக்களை கேவலமாக பேசிய தன்யா பாலகிருஷ்ணனை எப்படி, லால் சலாம் படத்தில் நடிக்க வைக்கலாம், அவரை விட்டால் கதாநாயகியாக நடிக்க யாருமே இல்லையா என அந்த படத்தின் டைரக்டர் ஐஸ்வர்யா ரஜினிகாந்துக்கு பலரும் கேள்வி எழுப்பினர். இது சோஷியல் மீடியாவில் வைரலானது.
இந்நிலையில் நடிகை தன்யா பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை; கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் நான் கூறியதாக வரும் கருத்துகள், நான் கூறியதே அல்ல. 12 ஆண்டுகளுக்கு முன்பே இதை தௌிவுபடுத்தினேன். இப்போதும் அதை மீண்டும் தௌிவுபடுத்த விரும்புகிறேன்.
அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கிரீன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. அந்தக் கருத்து நான் கூறியதே அல்ல. நான் என் சினிமா பயணத்தை துவங்கியதே தமிழில்தான். அதற்கு என்றும் நான் கடன்பட்டுள்ளேன்.
இந்த சர்ச்சைக்குரிய கருத்து நான் சொல்லவில்லை என்றாலும், என் பெயர் துரதிஷ்டவசமாக அதில் சம்பந்தப்பட்டு விட்டது. அதனால் தமிழக மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். இதை நிரூபிக்க என்னிடம் ஆதாரம் இல்லை. என் தொழில் மீது நான் சத்தியம் செய்து சொல்லும் இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று, அதில் தன்யா பாலகிருஷ்ணன் கூறியிருக்கிறார்.





