தமிழ் சினிமாவில் இயக்குனர் இமயம் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் பாரதிராஜா. சமீபகாலமாக நிறைய படங்களில் அவர் நடித்தும் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இந்நிலையில் இயக்குனர் பாரதிராஜாவின் ஒரே மகன் மற்றும் நடிகர் மனோஜ் பாரதிராஜா கடந்த ஏப்ரல் மாதம் மாரடைப்பால் மறைந்தார். 48 வயதில் தனது அன்பு மகனின் திடீர் மறைவு பாரதிராஜாவை நிலைகுலைய வைத்தது.
தனது தந்தையைப் போல சினிமாவில் பெரிய இயக்குனராக வேண்டும் என ஆசைப்பட்ட மனோஜ் கடந்த 1999ம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். இந்த படத்தை இயக்குனர் பாரதிராஜாவே டைரக்ட் செய்திருந்தார். ஆனால் இந்த படம் பெரிய வெற்றியை பெறவில்லை. தொடர்ந்து கடல் பூக்கள் ஈரநிலம் வருஷமெல்லாம் வசந்தம் சமுத்திரம் அன்னக்கொடி விருமன் என பல படங்களில் மனோஜ் நடித்தும் பெரிய நடிகராக வெற்றி பெற முடியவில்லை.
கடைசியாக மார்கழித் திங்கள் என்ற படத்தை அவரே டைரக்ட் செய்தார். இதுதான் அவர் இயக்கிய முதல் படமாகவும் கடைசி படமாகவும் மாறிவிட்டது. இந்நிலையில் மனோஜ் மறைந்து பல மாதங்கள் ஆகியும் பாரதிராஜாவும் அவரது குடும்பத்தினரும் இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவில்லை. பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது, மனோஜ் இறப்பு மிகப்பெரிய இழப்பு. இதிலிருந்து பாரதிராஜா இன்னும் மீளவே இல்லை.
இந்த துயரத்தை மறப்பதற்காக பாரதிராஜா மலேசியாவுக்கு சென்றார். அங்கு சென்றும் கூட பாரதிராஜா தனது மகன் மனோஜ் நினைவாகவே இருந்தார். எவ்வளவு பணம் புகழ் இருந்தாலும் இன்னும் பாரதிராஜா மகன் நினைவில் இருந்து மீண்டு வரவில்லை. இப்போதும் மகனின் நினைவுகளோடு கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஏற்கனவே பாரதிராஜா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். அந்த நேரத்தில் மனோஜ் மறைவு அந்த வருத்தத்தில் இருந்து அந்த குடும்பம் இன்னும் மீண்டு வரவில்லை.
என்னை பொறுத்தவரை மனோஜ் என்னுடன் இருப்பது போல் தான் இருக்கிறது. 5 வருடம் என் தோளில் போட்டு வளர்த்தேன். அவன் என்னை விட்டு பிரியவில்லை. என்னுடன் தான் இருக்கிறான் என்று பாரதிராஜா கூறிக்கொண்டு இருக்கிறார். பாரதிராஜாவின் அன்றாட தேவைகளை அவரது மகள்கள் பார்த்துக் கொள்கிறார்கள். பாரதிராஜாவை சந்திக்க யாரையும் அவர்கள் அனுமதிப்பதில்லை.
ஏனென்றால் மறந்திருப்பதை கூட அவர்கள் நினைவுபடுத்தி விடுவார்களோ என்ற எண்ணத்தில் தான் யாரும் அவரை பார்க்க அனுமதிப்பதில்லை. பாரதிராஜாவுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே உடல்நலம் சரியில்லாமல் இருந்தது. அதற்காக சிகிச்சை எடுத்து வருகிறார். அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக நினைவுகள் குறைந்து வருகிறது என்று பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் கூறியிருக்கிறார்.





