இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டில் வெளியான டிமான்டி காலனி படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. நடிகர் அருள்நிதி நாயகனாக நடித்திருந்தார். அதன்பிறகு 9 ஆண்டுகள் கழித்து கடந்த 2024ம் ஆண்டில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் டிமாண்டி காலனி 2ம் பாகம் வெளியானது.
முதல் பாகத்தை போலவே 2ம் பாகமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. குறிப்பாக இந்த படத்தில் அருள்நிதி 2 வேடங்களில் நடித்திருந்தார். கதாநாயகியாக பிரியா பவானி ஷங்கர் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். அருண் பாண்டியனும் சிறப்பாக நடித்திருந்த நிலையில் இந்த படமும் பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது.
தொடர்ந்து இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் நடிகர் அருள்நிதி நடிப்பில் உருவாகி வரும் டிமான்டி காலனி 3 படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திரில்லர் ஜானரில் தனித்துவமான முத்திரையை பதித்த இந்த படத்தின் முதல் மற்றும் 2ம் பாகங்கள் மிகுந்த வரவேற்பு பெற்ற நிலையில் 3ம் பாகம் மேலும் பரபரப்பை உருவாக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது.
டிமான்டி காலனி முதல் பாகம் வெளியான போது அதன் புதுமையான கதை அமைப்பும் பயமுறுத்தும் காட்சிகளும் வித்தியாசமான திரைக்கதையும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. டிமாண்டி காலனி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அந்த படத்தின் 2ம் பாகமும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததோடு கதையின் மர்மத்தை மேலும் விரிவுபடுத்தியது.
இப்போது டிமான்டி காலனி 3வது பாகம் எப்படி இருக்கும் என்ற ஆர்வமும் எதிர்பார்ப்பும் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. இந்நிலையில் டிமாண்டி காலனி 3ம் பாகத்தை எடுத்து வரும் படக்குழு ஒரு முக்கிய அப்டேட்டை வெளியிட்டு உள்ளது. அதன்படி இந்த படத்தில் இடம்பெறும் முக்கிய கேரக்டர்களில் ஒன்றான லைப்ரரியன் கதாபாத்திரத்தில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிக்கிறார் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
நடிகர் குரு சோமசுந்தரம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தும் கூத்துப்பட்டறை பயிற்சி பெற்ற கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. டிமாண்டி காலனி படத்தில் லைப்ரரியன் கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல மர்மங்களுக்கும் பின்னால் இருப்பது லைப்ரரியன் கேரக்டர் என்ற நிலையில் அந்த கேரக்டரில் நடிகர் குரு சோமசுந்தரம் நடிப்பது ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.





