நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்த முனி என்ற திகில் ஆக்சன் கலந்த திரில்லர் படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதையடுத்து அவர் காஞ்சனா காஞ்சனா 2 காஞ்சனா 3 என தொடர்ச்சியான திகில் படங்களை ரசிகர்களுக்கு கொடுத்தார். இந்த படங்கள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றன.
துவக்கத்தில் டான்ஸ் மாஸ்டராக தமிழ் சினிமாவுக்குள் வந்த ராகவா லாரன்ஸ் பிறகு அமர்க்களம் படத்தில் ஒரு பாடல் காட்சியில் தோன்றி நடனமாடினார். பிறகு பார்த்தேன் ரசித்தேன் படத்தில் ஆன்டி ஹீரோவாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். பிறகு அற்புதம் ஸ்டைல் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் முனி படம்தான் அவருக்கு நல்ல அடையாளத்தை கொடுத்தது.
தமிழ் சினிமாவில் இப்போது நடன இயக்குனர் நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் என பன்முக தன்மைகளை கொண்ட கலைஞராக உள்ள ராகவா லாரன்ஸ் மாற்றம் என்ற சேவை அமைப்பை துவங்கி பல விதங்களில் ஏழை எளிய மக்கள் குறிப்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிகளை செய்து வருகிறார்.
யாருக்கு கஷ்டம் என்று தெரிந்தாலும் அவர்களுக்கு உதவும் அவரது குணம் பெரிய அளவில் பாராட்டை பெறுகிறது. சமீபத்தில் ஒரு பெண்மணி, மண்ணில் டப்பாவில் போட்டு மூடிவைத்த 1 லட்சம் ரூபாயை கரையான் அரித்த நிலையில் அந்த பெண்ணை நேரில் வரவழைத்து ரூ. 1லட்சம் கொடுத்து உதவியவர்தான் ராகவா லாரன்ஸ். இப்படி பல உதவிகளை அவரே முன்வந்து செய்கிறார்.
இப்போது ராகவா லாரன்ஸ் காஞ்சனா 4 என்ற படத்தை இயக்கி அவரே நாயகனாக நடித்து வருகிறார். இதில் நடிகை பூஜா ஹெக்டேவும் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல மாதங்களாக பொள்ளாச்சி சென்னை ஐதராபாத் பாண்டிச்சேரி என பல இடங்களில் நடந்து வரும் நிலையில் லேட்டஸ்ட் தகவல் இப்போது வெளியாகி உள்ளது.
இதுவரை இடைவேளைக்கு முந்திய காட்சிகள் வரைதான் படப்பிடிப்பு நடந்துள்ளதாம். இன்னும் 5 பாடல் காட்சிகள் மீதம் உள்ளது. 85 நாட்கள் ஷூட்டிங் இன்னும் நடத்தப்பட வேண்டும் என்கின்றனர். இத்தனை நாட்களாகியும் இன்னும் 3 மாதங்கள் படப்பிடிப்பு உள்ளதா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். டெக்னிக்கலாக இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் என்பதால் படப்பிடிப்பு தளத்தில் லைட்டிங் செட்டிங் கேமரா கோணம் என மாஸ்டர் ராகவா லாரன்ஸ் அதிக நேரத்தை செலவிடுவதாக தெரிய வந்துள்ளது.





