கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை திரிஷா. 40 வயதுகளை கடந்தும் அவர் இன்னும் திருமணம் செய்துக்கொள்ளவில்லை. சில ஆண்டுகளுக்கு முன் தெலுங்கு பட தயாரிப்பாளர் வருண் மணியன் என்பவருடன் திரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. ஆனால் அதற்கு பின் திருமணம் நின்றுபோய் விட்டது.
திருமணத்துக்கு பிறகும் நடிகை திரிஷா நடிக்க விரும்பியதாகவும் அதற்கு மணமகன் வருண் மணியன் வீட்டார் தரப்பில் சம்மதிக்கவில்லை என்றும் அதனால் அந்த திருமணம் நிச்சயதார்த்தம் செய்ததோடு நின்றுவிட்டதாகவும் தகவல் வெளியானது. அதற்கு பிறகு நடிகை திரிஷாவுக்கு திருமண ஏற்பாடுகள் எதுவும் நடக்கவில்லை. இதுவரை அவர் முரட்டு சிங்கிளாக தான் சினிமாவில் வலம் வருகிறார்.
இதற்கிடையே அவ்வப்போது நடிகை திரிஷா திருமணம் குறித்த தகவல் வெளியாகும். ஆனால் சில நாட்களில் அது வதந்தி என்பது தெரிய வரும். பிரபல நடிகர் ஒருவருடன் நடிகை திரிஷா நெருக்கமான நட்பில் இருப்பதாக நீண்டகாலமாக ஒரு தகவல் இருந்து வருகிறது. ஆனால் இதுவரை அதுகுறித்து இருவருமே எந்த விதமான பதிலோ விளக்கமோ தந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திடீரென இப்போது நடிகை திரிஷாவுக்கு அவரது பெற்றோர் தரப்பில் திருமண ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் பஞ்சாப் மாநிலம் சண்டிகரை சேர்ந்த ஒரு தொழிலதிபர் தான் மணமகன் என்றும் வேகமாக தகவல் பரவியது. மேலும் அவர் ஆஸ்திரேலியாவில் பிஸினஸ் செய்பவர் என்றும் இரு வீட்டார் தரப்பிலும் பேசி திருமணம் குறித்து முடிவு செய்துவிட்டதாகவும் சமூக ஊடகங்களில் ஒரு தகவல் வேகமாக பரவியது.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே திரிஷாவின் அம்மா திருமணம் செய்துக்கொள்ளுமாறு திரிஷாவை வலியுறுத்தி வருவதாகவும் அதே நேரத்தில் படங்களில் திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்க சம்மதிக்கும் விதமான வரன்களை தேடி வருவதாகவும் தகவல் வெளியானது. அதனால் ஒருவேளை இந்த தகவல் உண்மையாக இருக்கலாம் என்று பலரும் சந்தோஷப்பட்டனர்.
ஆனால் திரிஷா தரப்பில் இருந்து இந்த தகவல் சிறிதும் உண்மையில்லை என்பது இப்போது உறுதியாகி விட்டது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை செய்துள்ள நடிகை திரிஷா, என் வாழ்க்கை குறித்து மக்கள் முடிவெடுப்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது. அப்படியே ஹனிமூன் செல்வது குறித்தும் சொன்னால் நல்லது என்று கிண்டலாக அந்த பதிவில் கூறியிருக்கிறார்.





