கடந்த 14ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் வெளியானது. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், இந்த படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் கண்டிப்பாக வரும் என்று ஏற்கனவே தெரிந்து கொண்டாரா எனத் தெரியவில்லை. ஆனால் இந்த விழாவில் பேசும்போது கூலி படத்தின் கதாநாயகன் லோகேஷ் கனகராஜ் என்று குறிப்பிட்டு பேசினார்.
அதனால் கூலி படம் பார்த்த பெரும்பாலான ரசிகர்கள், அந்த படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜை தாறுமாறாக விமர்சித்து வருகின்றனர். கூலி படத்தை பொருத்த வரை படத்தில் நடித்த நடிகர்கள் நடிகைகள் யாரையுமே ரசிகர்கள் விமர்சிக்கவில்லை. இதற்கெல்லாம் ஒட்டுமொத்த பொறுப்பாளராக கதை திரைக்கதையில் சொதப்பிய இயக்குனர்தான் காரணம் என்று லோகேஷை விமர்சித்து வருகின்றனர்.
மாநகரம் விக்ரம் கைதி படங்களில் லோகேஷ் கனகராஜின் கதை திரைக்கதை இயக்கம் பெரிய அளவில் கவனம் பெற்றது. ஒவ்வொரு காட்சியிலும் அவர் நுணுக்கமாக தனது இயக்கத்தில் செறிவு செய்திருந்தார். காட்சிகளை புதுமைப்படுத்தி இருந்தார். வன்முறை காட்சிகள் இருந்தாலும் அதையும் கடந்து அவரது இயக்கத்தில் ஒரு ஆளுமை இருந்தது.
ஆனால் கூலி படத்தை பொருத்த வரை லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களின் தாக்கமோ ஆளுமையோ சுத்தமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அவரது நெருங்கிய நண்பர் ரத்னக்குமார் கூலி படத்தில் லோகேஷூடன் இணைந்து பணிபுரியாததுதான் காரணமோ என்றும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
லியோ பட விழாவில் பேசிய ரத்னக்குமார், நடிகர் ரஜினிகாந்தை மறைமுகமாக தாக்கிப் பேசி விஜயை புகழ்ந்து பேசினார். இது ரஜினி ரசிகர்களை மட்டுமின்றி ரஜினிக்கும் கடுப்பை ஏற்படுத்தியது. இதை தெரிந்துக்கொண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மற்ற தனது படங்களில் லோகேஷ் கனகராஜ் தனது உதவி இயக்குனராக பணிசெய்த தனது நெருங்கிய நண்பர் ரத்னக்குமாரை கூலி படத்தில் பணிபுரிய அனுமதிக்காமல் அவரை விலக்கி வைத்து விட்டார்.
அதன்பிறகு கூலி படம் ரிலீஸாக சில தினங்கள் இருந்த போது லோகேஷ் கனகராஜ் திருவண்ணாமலை, இராமேஸ்வரம் போன்ற ஊர்களுக்கு சென்று இறைவழிபாடு நடத்தினார். அப்போது அவருடன் ரத்னக்குமார் காணப்பட்டார். ரஜினிக்காக தன் நண்பரை பிரிந்திருந்த லோகேஷ், அவரது படத்தை முடித்த பிறகு மீண்டும் நண்பரை தன்னுடன் சேர்த்துக்கொண்டிருக்கிறார். கைதி 2 படப்பிடிப்பில் ரத்னக்குமாரும் லோகேஷூடன் பணிபுரிய வாய்ப்புள்ளது.





