இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் லியோ. இதில் நடிகர் விஜய் லியோ, பார்த்திபன் என இரண்டு கேரக்டர்களில் நடித்திருந்தார். பார்த்திபன் விஜய்க்கு மனைவியாக, இரண்டு பிள்ளைகளுக்கு தாயாக திரிஷாவும் இந்த படத்தில் சிறப்பான பங்களிப்பை தந்திருந்தார்.
இந்த படத்தில் அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், கவுதம் மேனன், சாண்டி மாஸ்டர், பிரியா தத் என பலரும் நடித்திருந்தார். இந்தியில் பிரபல நடிகராக, இயக்குநராக உள்ள அனுராக் காஷ்யப் இந்த படத்தில் ஒரு காட்சியில் மட்டுமே தோன்றி இருந்தார். அதே போல், மடோனா செபாஸ்டியன், விஜய்க்கு தங்கையாக நடித்திருந்தார்.
லியோ படத்தை பொருத்த வரை விமர்சன ரீதியாக வெற்றிப்படமா, தோல்வி படமா என்பது, கலவையான விமர்சனமாகவே உள்ளது. ஆனால், வியாபார ரீதியாக லியோ ஒரு சூப்பர் டூப்பர் ஹிட் படம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம், ரிலீஸ் ஆன 12 நாட்களில் 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூலில் சாதனை புரிந்திருக்கிறது.
லியோ படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு, லியோ இசை வெளியீட்டு விழா நடப்பதாக இருந்தது. பாதுகாப்பு உள்ளிட்ட சில காரணங்களால் அந்த விழா திடீரென ரத்து செய்யப்பட்டதால், ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். அந்த ஏமாற்றத்தை போக்கும் விதமாக நேற்று, நேரு இன்டோர் ஸ்டேடியத்தில் லியோ படம் வெற்றிவிழா கொண்டாடப்பட்டது.
லியோ படத்தை இயக்கிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ், இவ்விழாவில் கலந்துக்கொண்டார். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை தொடர்ந்து லியோ, அவருக்கு 5வது படம். 6வது படமாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ரஜினி 171 படத்தை வரும் 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்க இருக்கிறார்.
லியோ பட விழாவில் பேசிய டைரக்டர் லோகேஷ் கனகராஜ் கவுதம் மேனன், மிஷ்கின், அனுராக் காஷ்யப், கமல் போன்ற பல இயக்குநர்கள் என் படத்தில் நடிக்கின்றனர். அவர்கள் சுதந்திரமாக என்னை வேலை செய்ய அனுமதிக்கின்றனர். என் படத்தில், இயக்குநர் வெற்றிமாறன் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். இதுவரை அது நடக்கவில்லை. 3 படங்களுக்கு இதுவரை அவரிடம் கேட்டு விட்டேன். ஒரு படத்தில் கூட அவர் நடிக்க சம்மதிக்கவில்லை. ஆனால், எப்படியும் என் படத்தில் அவரை நடிக்க வைத்து விடுவேன், என கூறி இருக்கிறார்.





