அமரன் படத்துக்கு பின் நேற்று இயக்குனர் ஏஆர் முருகதாஸ் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படம் வெளியானது. இதில் கதாநாயகியாக ருக்மணி வசந்த் வில்லனாக வித்யூத் ஜம்வால் மற்றும் முக்கிய கேரக்டர்களில் பிஜூ மேனன் விக்ராந்த் தலைவாசல் விஜய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படத்துக்கு அனிருத் இசையமைத்து இருந்தார்.
மதராஸி படத்தை இயக்கிய ஏஆர் முருகதாஸ் ஏற்கனவே அவரது இயக்கத்தில் வெளியான துப்பாக்கி கஜினி ஏழாம் அறிவு தீனா தர்பார் உள்ளிட்ட படங்களின் கலவையாக ஒரு கதையை உருவாக்கி தந்திருக்கிறார் என்பதுதான் உண்மை. பல காட்சிகளில் அதை படம் பார்க்கும் ரசிகர்கள் தெளிவாக உணர முடிகிறது.
ஆனால் படம் ரசிக்கும்படியான ஒரு கதைக்களத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. குறிப்பாக இடைவேளை காட்சியில் வில்லனுக்கு சிவகார்த்திகேயன் சவால் விடும் காட்சியில் திரைக்கதை பயங்கர வைப் ஆக இருக்கிறது. சிவகார்த்திகேயனை பொருத்த வரை ஆக்சன் ஹீரோவாக பட்டைய கிளப்பி இருக்கிறார்.
குறிப்பாக கடைசியில் வரும் 2 சண்டை காட்சிகளில் சிவகார்த்திகேயன் ஒரு முரட்டுத்தனமான வில்லனை அடித்து நொறுக்கும் காட்சியில் பலத்த கைதட்டலை பெறுகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட அவரது நடிப்பில் உடல் மொழியில் சில காட்சிகளில் பிதாமகன் விக்ரமும் வந்து வந்து போகிறார்.
இந்த படத்தின் கதை திரைக்கதை முழுவதுமே துப்பாக்கியை மையப்படுத்தியதுதான். தமிழகத்தில் துப்பாக்கி கலாசாரம் மேலோங்க வேணடும். கத்தி அருவாள் வெட்டு போல துப்பாக்கி சூடும் பரவலாக நடக்க மக்களிடம் துப்பாக்கி புழக்கம் அதிகரிக்க வேண்டும் என்றுதான் ஒரு சமூக விரோத கும்பல், 5 கண்டெய்னர் லாரிகளில் துப்பாக்கிகளை தமிழ்நாட்டுக்குள் கொண்டு வருகிறது.
அந்த துப்பாக்கிகள் மக்களின் கைகளுக்கு சென்றுவிட கூடாது என்று போலீஸ் தனிப்படைக்கு உதவும் ஒரு மனநலம் பாதித்த இளைஞராக தான் சிவகார்த்திகேயன் படத்தில் வருகிறார். கடைசியில் தனது காதலியை காப்பாற்ற போராடுகிறார். அதனால் இந்த படத்துக்கு துப்பாக்கி 2 என்றே டைட்டில் வைத்திருக்கலாம் என்று படம் பார்த்த ரசிகர்கள் கூறுகின்றனர். மதராஸி படம் முதல் நாளில் ரூ. 10 கோடி வரை வசூல் செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.





