அமரன் படத்தின் அபார வெற்றிக்கு பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இன்று வெளியான படம் மதராஸி. இயக்குனர் ஏஆர் முருகதாஸ், நடிகர் சிவகார்த்திகேயன் கூட்டணியில் அனிருத் இசையில் வெளியான இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. ஆக்சன் களத்தில் அதிரடி காட்டி அசத்தியிருக்கிறார் எஸ்கே என்றால் அது மிகையல்ல.
சென்னைக்கு 5 கண்டெய்னர்களில் துப்பாக்கிகளை சென்னைக்கு கொண்டு வருகிறது ஒரு சமூக விரோத கும்பல். அந்த கேங்ஸ்டரின் லீடர்தான் வித்யூத் ஜம்வால், அந்த கும்பலை தடுக்கவும் துப்பாக்கி லோடுகளை கைப்பற்றவும் போலீஸ் தனிப்படை நடிகர் பிஜூமேனன் தலைமையில் அவரது மகன் விக்ராந்த் உள்ளிட்ட குழுவினர் முயற்சிக்கின்றனர். ஆனால் அவர்களால் தடுக்க முடிவதில்லை.
காதல் தோல்வியால் தற்கொலை செய்துக்கொள்ள முயற்சிக்கும் சிவகார்த்திகேயனை அனுப்பி, அந்த துப்பாக்கி லோடுகள் உள்ள கண்டெய்னர்களை மொத்தமாக அழிக்க பிஜூ மேனன் திட்டமிடுகிறார். அந்த சம்பவத்தில் கேங்ஸ்டர் வித்யூத் ஜம்வாலை துப்பாக்கியால் சுட்டு போலீஸ் கஸ்டடிக்கு கொண்டு வந்து விடுகிறார் சிவகார்த்திகேயன்.
காணாமல் போன காதலி ருக்மணி வசந்த் திரும்பி வந்துவிட போலீஸ் கஸ்டடியில் இருக்கும் அவரை வில்லன் கும்பல் கடத்துகிறது. அந்த துப்பாக்கி சண்டையில் தனிப்படை அதிகாரி பிஜூமேனன் தன் மகன் விக்ராந்தை பறிகொடுக்கிறார். கடைசியில் சிவகார்த்திகேயன் வில்லனிடம் சிக்கிய தனது காதலியை உயிருடன் மீட்பதுதான் மதராஸி படத்தின் கதை.
இந்த படத்துக்கு மதராஸி என்பதற்கு பதிலாக துப்பாக்கி 2 என்றே டைட்டில் வைத்திருக்கலாம். படம் முழுவதும் துப்பாக்கி கண்டெய்னர்களை மையப்படுத்தியே இருக்கிறது. தமிழ்நாடு முழுவதும் துப்பாக்கி கலாசாரத்தை பரவ விடும் சமூக விரோத கும்பலை தடுத்து, தமிழ்நாடு அமைதி பூங்காவாகவே எப்போதும் இருக்க வேண்டும் என்ற கருத்தை மதராஸி கதை மூலம் ஏஆர் முருகதாஸ் சொல்லி இருக்கிறார்.
அதே நேரத்தில் குடும்பத்தை மொத்தமாக ஒரு விபத்தில் பறிகொடுக்கும் சிவகார்த்திகேயன், மனநலம் தவறியவராக இருந்தாலும் ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவும் ஒரு குணம் கொண்டவராக பலரையும் அவர் காப்பாற்றுகிறார். மொத்தத்தில் மதராஸி படம் ஆக்சன் காட்சிகளில் தீப்பொறி பறக்கிறது. குடும்பத்துடன் ரசித்து பார்க்க வேண்டிய ஒரு படமாகவும் இருக்கிறது.





