மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மஞ்சு வாரியர். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களில் தொடர்ந்து நடித்து ரசிகர்களின் மத்தியில் அதிக கவனம் பெற்று வருகிறார். சமீபகாலமாக மலையாள படங்கள் மட்டுமின்றி தமிழிலும் முக்கியமான இயக்குனர்கள் படங்களில் மஞ்சுவாரியர் நடித்து வருகிறார்.
தசெ ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படத்தில் ரஜினிக்கு மனைவியாக நடித்திருந்தார். அதே போல் எச் வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடித்த துணிவு மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படத்தில் தனுஷூக்கு ஜோடியாகவும், விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகவும் மஞ்சுவாரியர் நடித்திருந்தார். தொடர்ந்து தமிழில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து வருகிறார்.
மலையாளத்தை போலவே தமிழ் சினிமாவிலும் மஞ்சுவாரியருக்கு ரசிகர்கள் கூட்டம் பெருகி வருகிறது. சமீபத்தில் நடிகர் பிருத்திவிராஜ் டைரக்சனில் நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியாகியுள்ள எல்2 எம்புரான் படத்தில் நடிகை மஞ்சுவரியரும் நடித்துள்ளார். இந்த படம் குறித்த பிரமோஷன் நிகழ்ச்சிகளில் தொடர்ந்து அவரும் பங்கேற்று எம்புரான் படம் குறித்து பேசி வருகிறார்.
இந்நிலையில் ஒரு நேர்காணலில் நடிகை மஞ்சுவாரியர் பங்கேற்றார். அப்போது அவரிடம், உங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வரும் புகழ் மக்களிடமிருந்து உங்களை ஒதுக்கி வைக்கிறதா என்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு நடிகை மஞ்சு வாரியார் பதிலளித்து பேசுகையில், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என என்னால் சொல்ல முடியும். அதுதான் நான்.
குறிப்பாக கேரளாவில் யார் ஒருவருக்கும் நான் அந்நியமானவள் இல்லை. எந்த நேரத்திலும் அது இரவோ பகலோ எந்த வீட்டு கதவையும் என்னால் தட்ட முடியும். அப்போது கதவைத் தட்டி அவர்களிடம் ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுங்கள் என்று என்னால் வாங்கி குடிக்க முடியும்.
அவர்களும் ஏன் என்று என்னிடம் கேள்வி கேட்காமல் எனக்கு தண்ணீர் கொடுப்பார்கள். இவள் வந்து எதற்காக நம்மிடம் தண்ணீர் கேட்கிறாள் என்று அவர்கள் சந்தேகம்கூட பட மாட்டார்கள் என்று நடிகை மஞ்சு வாரியர் கூறியிருக்கிறார். இரவு நேரத்தில் யாராக இருந்தாலும் கதவு தட்டி தாகத்துக்கு தண்ணீர் கேட்டால் யோசிக்காமல் கொடுப்பார்களே, அதுவும் ஒரு பிரபல நடிகை கேட்டால் குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மாட்டார்களா? என ரசிகர்கள் ஆச்சரியமாக கேள்வி எழுப்புகின்றனர்.





